
இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் அவரது பேட்டிங் ஃபார்ம் சற்று மோசமாகவே இருந்தது. மேலும் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த பல்வேறு விமர்சனங்களும் அதிகளவில் இருந்து வந்தன.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் 21 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 52 ரன்கள் குவித்து அட்டகாசமான துவக்கத்தை அளித்தார். அதன் காரணமாக இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு சென்று வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசிய அபிஷேக் சர்மா கூறுகையில் :
இந்த தொடரில் என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இந்த தொடர் எனக்கு சற்று ஏற்றத்தாழ்வாகவே அமைந்தது. ஒரு விடயத்தை நான் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். இதைவிட சிறந்த நாள் அதற்கு இருக்காது என்று நினைக்கிறேன். எனது அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில் இந்த தொடரில் எனது பேட்டிங் ஃபார்ம் சற்று கீழ் இறங்கியதும் என்மீது எனக்கே சந்தேகம் இருந்தது. இந்த தொடர் எனக்கு எளிதான ஒன்றாக அமையவில்லை. சர்வதேச உலக கோப்பை போட்டிகளில் இது எனது முதல் தொடர். எனவே எனக்கு நிறையவே அழுத்தம் இருந்தது. ஆனாலும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர்.
இதையும் படிங்க : நான் வேண்டுமென்றே அவரை அடிக்கல.. வெற்றிக்கு பின்னர் டேரல் மிட்சலிடம் மன்னிப்பு கேட்ட – அர்ஷ்தீப் சிங்
நான் பேட்டிங்கில் சொதப்பிய போதெல்லாம் என்னை அழைத்து நீ ஒரு மிகச்சிறந்த வீரர். நிச்சயம் உன்னால் எங்களுக்கு பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றுத்தர முடியும் என்று இருவரும் என்னை ஊக்கப்படுத்தினர். அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளே என்னை இந்த இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட வைத்தது என பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் அபிஷேக் சர்மா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.