நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி எந்த ஒரு சவாலும் இல்லாமல் எளிதாக வெற்றி பெற்ற வேளையில் களத்தில் சில சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்றிருந்தன. அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் நியூசிலாந்து வீரரான டேரல் மிட்சல் பேட்டிங் செய்யும்போது அவர் அடித்த பந்தை பிடித்து த்ரோ செய்கையில் அந்த பந்து டேரல் மிட்சலின் கால் பகுதியில் தாக்கியது.
டேரல் மிட்சலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் :
இதன் காரணமாக கோபம் அடைந்த டேரல் மிட்சல் அம்பயரிடம் புகார் தெரிவித்து இருந்தார். அந்த நேரத்தில் சற்று ஆக்ரோஷமாக இருந்த டேரல் மிட்சலை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆசுவாசப்படுத்தி இருந்தார். களத்தில் நடந்த இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பாகியது.
இந்நிலையில் இந்த இறுதி போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அர்ஷ்தீப் சிங் நேராக டேரல் மிட்சலிடம் சென்று நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவரை கட்டி தழுவிக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் சிரித்தபடியே பேசி அங்கிருந்து நகர்ந்தனர். இந்த விடயம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசியிருந்த அர்ஷ்தீப் சிங் இந்த விவகாரம் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே நான் டேரல் மிட்சலிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். நான் அடித்த த்ரோ சற்று தவறாக சென்று அவரது உடலில் பட்டது. நான் வேண்டுமென்றே அவரை தாக்க வேண்டும் என்று பந்தை எறியவில்லை. தெரியாமல் பந்து அவர் மீது பட்டு விட்டது அதனால் அவரிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
இதையும் படிங்க : ஒன்றரை ஆண்டுகளாக நாங்க போட்ட இந்த பிளானுக்கு கிடைத்த பரிசுதான் இந்த கோப்பை – திலக் வர்மா பேச்சு
இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்த கோப்பைகளை நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அணி மிகப் பிரமாதமான ஒரு அணியாக இருக்கிறது. எங்களது அணியில் உள்ள அனைவருமே மேட்ச் வின்னராக இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியில் இணைந்து கோப்பையை வென்றது மகிழ்ச்சி என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



