
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. முன்னதாக இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து ஒரு வீரர்கள் கூட இடம் பெறவில்லை. குறிப்பாக ஹைதராபாத் அணியில் நடராஜன் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
இருப்பினும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட அவரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கவில்லை. அதே போல கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் முழுமையான வாய்ப்பு பெறாத அவரை ஓரிரு போட்டிகளுடன் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது.
சக்ரவர்த்தியின் வாய்ப்பு:
அதைத் தொடர்ந்து மீண்டும் விளையாடுவதற்காக போராடி வரும் அவர் 2024 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ஆனாலும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுப்பதை பற்றி இந்திய அணி நிர்வாகமும் தேர்வுகுழுவும் பரிசீலனை கூட செய்யவில்லை. இந்நிலையில் வருண் சக்கரவர்த்தியிடம் பேட்டிங் செய்ய பழகுமாறு இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்ததாக அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
ஆனால் அதை செய்வதற்கு துவங்கிய பின் மேற்கொண்டு அவரை இந்திய அணி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார். கொல்கத்தா அணியின் முக்கிய துணை பயிற்சியாளராக இருக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு வருடமும் நன்றாக விளையாடுகிறார். பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய இரண்டிலும் முன்னேற வேண்டும் என்று தேர்வுக் குழுவினர் சொன்னதாக அவர் என்னிடம் கூறினார்”
“அப்போது தான் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அதனால் முன்னேறிய அவர் விஜய் ஹசாரே கோப்பையில் 2 சிக்சர்கள், 40 ரன்கள் அடித்த வீடியோவை எனக்கு அனுப்பினார். அந்த வகையில் அணிக்கு எது தேவை என்பதை புரிந்து அதற்கு தகுந்தார் போல் வீரர்கள் வேலை செய்கின்றனர்”
இதையும் படிங்க: சுயநலவாதின்னு சொன்னாலும் அதை மட்டும் செய்யாதீங்க.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் கோலிக்கு ஃகைப் கோரிக்கை
“அதே போல வருண் சக்கரவர்த்தியும் தன்னுடைய ஃபீல்டிங்கில் முன்னேற்றத்தை சந்தித்தார். எப்போதுமே வீரர்கள் 3 விதமான துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதில் வேலை செய்வார்கள்” என்று கூறினார். இந்த நிலையில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் போன்ற ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.