
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசியில் சொதப்பி சமன் மட்டுமே செய்தது. ஆனால் 2வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆகஸ்ட் நான்காம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 240/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதைத் துரத்திய இந்தியாவுக்கு மீண்டும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மீண்டும் எதிர்ப்புறம் தடுமாறிய சுப்மன் கில் 35 ரன்களில் நடையை கட்டினார். அத்துடன் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தது தவிர்த்து விராட் கோலி, சிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
சரியான முடிவு:
அதனால் 208 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் இருதரப்பு தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்த தோல்விக்கு அனுபவமற்ற சுந்தர், துபேவை 4, 5வது இடத்தில் களமிறக்கிய புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனுபவமிக்க ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை புதிய 6, 7வது இடத்தில் களமிறக்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்ற கருதியே கம்பீர் அந்த முடிவை எடுத்ததாக துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
எனவே தோல்விக்கு அந்த முடிவு காரணமல்ல என்று தெரிவிக்கும் நாயர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எந்த வகையான விளையாட்டிலும் நீங்கள் போட்டியின் வெவ்வேறு இடங்களில் விளையாடினால் மட்டுமே இடம் முக்கியம் என்று நான் நம்புகிறேன். மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். அங்கே தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். சில நேரங்களில் 4, 5 அல்லது 6 போன்ற நம்பர்கள் உங்கள் தலையில் விளையாடும்”
இதையும் படிங்க: நீங்க வெளிநாட்டு கோச் கிடையாது.. அவங்க விளையாட வெச்சு அவமானப்படுத்தலாமா.. கம்பீரை விமர்சித்த நெஹ்ரா
“ஆனால் இவை அனைத்தும் இலங்கையின் ஆஃப் ஸ்பின்னர்கள், லெக் ஸ்பின்னர்களை பார்த்து இடது – வலது கை ஜோடிகளை பயன்படுத்துவது பற்றியதாகும். எனவே எங்களுடைய சிந்தனை செயல்முறைகள் சரியானதே. இருப்பினும் அது வேலை செய்யாத போது இது போன்ற கேள்விகள் எழுவது சகஜம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் விளையாடுவது சரியான முடிவு என்றே நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.