இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்டு சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆகஸ்ட் நான்காம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 240/9 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 64 ரன்கள் அடித்து மீண்டும் நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் இந்தியாவை 208 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வெளிநாட்டு கோச் கிடையாது:
மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் 240 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தோற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரின் பேட்டிங் வரிசையை மாற்றிய கௌதம் கம்பீரின் முடிவு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர்.
ஆனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத கம்பீர் அவர்களை இத்தொடரில் கட்டாயமாக விளையாட வைத்து அவமானப்படுத்தியதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி – ரோஹித்துக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என்று ஆசிஸ் நெஹ்ராவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்ததாக 2 – 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. இது நமக்கு அரிதானது. எனவே விராட், ரோஹித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதால் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மண், ரசிகர்களை மறக்க முடியுமா.. சென்னையில் தான் வளர்ந்து அந்த சாதனையை படைச்சேன்.. ராகுல் டிராவிட் பேட்டி
“ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. விராட், ரோஹித்திடம் சமமான உரிமையை பெறுவதற்கு கம்பீர் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோஹித்தை விளையாட வைத்து விட்டு கம்பீர் இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.



