தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி வென்றது. குறிப்பாக ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவையை 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் தோற்கடித்தது. அதனால் அஸ்வின் தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்று திண்டுக்கல் சாதனை படைத்தது.
அந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பயிற்சியாளராக உதவிய அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அந்த நிலையில் டிஎன்பிஎல் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வந்த டிராவிட் ஃபைனலை கண்டு களித்து கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.
மறக்க முடியாத சென்னை:
அப்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உங்களுடைய மறக்க முடியாத நினைவுகளை பற்றி கூறுமாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டது. அதற்கு தம்முடைய இளம் வயதில் சென்னையில் தான் டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாடி வளர்ந்ததாக டிராவிட் கூறினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10000வது ரன்னை சென்னை மண்ணில் தான் அடித்ததாக ராகுல் டிராவிட் நினைவு கூர்ந்தார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே எனக்கு சில சிறந்த நினைவுகள் இருக்கிறது. உண்மையில் இங்கே தான் என்னுடைய வளரும் இளம் வயதில் லீக் போட்டிகளில் விளையாடினேன். அப்போது சேப்பாக்கம் மைதானம் வித்தியாசமாக இருந்தது. அனைத்தும் கான்கிரீட் ஸ்டாண்ட்களாக இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளதை பார்ப்பது அழகாக இருக்கிறது”
“இருப்பினும் இங்கே லீக் கிரிக்கெட்டை விளையாடியது சிறப்பாக இருந்தது. அதே போல சர்வதேச கிரிக்கெட்டிலும் இங்கே சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் நம் நாட்டிலேயே சென்னை ரசிகர்கள் அதிக ஆதரவை கொடுக்கக் கூடியவர்கள். அவர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை அறிந்து விரும்பக் கூடியவர்கள். எனவே சேப்பாக்கத்தில் நான் விருப்பத்துடன் விளையாடினேன்”
இதையும் படிங்க: அடுத்தடுத்த மேட்ச் ஆச்சர்யமா இருக்கு.. இதை மாத்தியாகனும்.. தோல்விக்கான காரணம் பற்றி அபிஷேக் நாயர்
“என்னுடைய 10,000 ரன்களை இந்த மைதானத்தில் தான் அடித்தேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இங்கே மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளை பெற்றோம். அது மிகவும் ஸ்பெஷலான தருணம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அல்லது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடப்பட்டது.



