ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணி, கோப்பையுடன் திரும்புமா? மிகப்பெரிய வித்யாசத்தை கண்டறிந்த முன்னாள் வீரர்

Team India
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வாரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் 45 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2007இல் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற தொடரை வென்றாலும் அதன்பின் கடந்த 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்க 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.

கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. அதனால் இம்முறை கோப்பை நமக்கு தான் என மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

பதினான்கும் பதினாறும்:
தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களையும் சரியாக பயன்படுத்தாதது, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் தோல்வியை சந்தித்த இந்தியா அதற்காக துவளாமல் அடுத்ததாக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த அடுத்தடுத்த டி20 தொடர்களை வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருந்தாலும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய தொடக்க வீரர்களின் தடுமாற்றமான பார்ம் இந்தியாவுக்கு கவலையளிக்கிறது.

மேலும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் ஆசிய கோப்பை போன்ற தோல்விகளை சந்தித்தும் அதில் இன்னும் முன்னேறாமல் இருப்பது இந்தியாவின் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. அதை சரி செய்வார் என்று கருதப்பட்ட “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்” என்றழைக்கப்படும் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் சந்தித்த முதுகுப்புற காயத்தால் இந்த உலக கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு முதல் அடியிலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் தோல்விகளில் இருந்து கற்ற பாடங்களை எடுத்துக்கொண்டு குறைகளை நிறையாக்கி உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று தனி விமானம் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். அதில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படாததால் ரோகித் தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட 14 மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். மேலும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இடம் பெற்றுள்ள முகமது சமி, தீபக் சஹர் ஆகியோரும் உம்ரான் மாலிக் போன்ற நெட் பந்து வீச்சாளர்களும் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப்பின் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு இன்று புறப்பட்ட இந்திய அணிக்கு எப்படியாவது சிறப்பாக செயல்பட்டு கோப்பையுடன் நாடு திரும்புமாறு அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் பிசிசிஐ பகிர்ந்த இந்திய அணியின் புறப்படும் புகைப்படத்தை பார்த்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஒரு வித்தியாசமான உண்மையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் அதிகமாகவும் இந்தியாவுக்கு குறைவாகவும் பும்ரா விளையாடினாரா? உண்மையை உரைக்கும் புள்ளிவிவரம் இதோ

அதாவது களத்தில் இறங்கி விளையாடும் 14 வீரர்களை விட தலைமை பயிற்சியாளர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர், மருத்துவர் என இந்திய வீரர்களுக்கு உதவி புரிவதற்காக மட்டுமே 16 பேர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். ஒரு காலத்தில் ஒரு சிலர் மட்டுமே இருந்த பயிற்சியாளர்கள் குழுவில் தற்போது நவீன கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கேற்ப அனைத்து துறைக்கும் ஒரு பயிற்சியாளர் இருப்பதால் வீரர்களை விட பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அபிநவ் முகுந்த் சுட்டிக்காட்டியதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement