ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் 14 மட்டும் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர். ஏனெனில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கு பதில் களமிறங்கும் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 5 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்திய பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாக மாறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே, மிடில் ஓவர் என அனைத்துச் சூழ்நிலையிலும் கச்சிதமாக பந்து வீசும் திறமை பெற்றுள்ள பும்ரா டெத் ஓவர்களில் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு திருப்பக்கூடிய துருப்புச்சீட்டு பவுலராக பார்க்கப்படுகிறார். அதே சமயம் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடியவர்கள் என்பதுடன் தற்சமயத்தில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக சுமாரான பார்மில் உள்ளனர். அதனால் ஜஸ்பிரித் பும்ரா விலகியது இந்தியாவின் உலகக் கோப்பை கனவை ஆரம்பத்திலேயே உடைத்துள்ளதாக நிறைய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ரசிகர்கள் குற்றசாட்டு:
முன்னதாக இப்படி ஒரு மோசமான நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் என சமீப காலங்களில் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான முக்கியமில்லாத டி20 தொடர்களில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஓய்வெடுத்த ஜஸ்பிரித் பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் விலகியுள்ளது நிறைய ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது. அதிலும் கடந்த 2019க்குப்பின் ஐபிஎல் தொடரில் மும்பை விளையாடிய 60 போட்டிகளில் 59 போட்டிகளில் பங்கேற்ற அவர் அதே காலகட்டத்தில் இந்தியா விளையாடிய 70 டி20 போட்டிகளில் வெறும் 16இல் மட்டுமே விளையாடினார் என்ற ஆதாரத்தையும் ரசிகர்கள் நீட்டுகின்றனர்.

அதனால் இவர் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவார் நாட்டுக்காக விளையாடமாட்டார் என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். இருப்பினும் வேண்டுமென்றே யாரும் காயமடைய மாட்டார்கள் என்ற நிலைமையில் இதர பவுடர்களை விட ஜஸ்பிரித் பும்ரா தான் இந்தியாவுக்கு அதிகமாக விளையாடியுள்ளார் எனக்கூறும் புள்ளிவிவரத்தை பற்றி பார்ப்போம்:
1. முதலில் இந்திய அணியில் இருக்கும் மற்ற பவுலர்களை விட பும்ரா மட்டுமே 3 வகையான கிரிக்கெட்டிலும் அனைத்து முக்கிய போட்டிகளில் விளையாடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் 2018இல் அறிமுகமானது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதர வேகப்பந்து வீச்சாளர்களை விட ஜஸ்பிரித் பும்ரா தான் இந்தியாவுக்காக அதிக ஓவர்கள் வீசியுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 1044.4
2. முகமது ஷமி : 949.0
3. இஷாந்த் சர்மா : 622.2

2. மேலும் அறிமுகமானது முதல் இதர இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தான் அதிக ஓவர்கள் வீசியுள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரிட் பும்ரா : 634.3
2. புவனேஸ்வர் குமார் : 504.4
3. ஹர்திக் பாண்டியா : 438.4
3. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் ஓய்வெடுத்தாலும் 2016இல் அறிமுகமான பின்பு இந்தியாவுக்காக அவர் 2வதாக அதிக ஓவர்கள் வீசியுள்ளார். அந்தப் பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 227.5
2. ஜஸ்பிரிட் பும்ரா : 213.5
3. ஹர்டிக் பாண்டியா : 185.5

4. மொத்தமாக 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அறிமுகமான 2016 முதல் இதர இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் அவரே அதிக ஓவர்கள் வீசியுள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா : 1893.0
2. முகமத் ஷமி : 1710.4
3. உமேஷ் யாதவ் : 1081.4
5. அதேபோல் ஐபிஎல் டி20 தொடர்களை காட்டிலும் சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கை விட கடந்த 5 வருடங்களில் பும்ரா அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரிட் பும்ரா : 112
2. மிட்சேல் ஸ்டார்க் : 101
இதையும் படிங்க: பும்ராவுக்கு பதில் ஷமியை விட அவர்தான் டி20 உ.கோ’யில் விளையாட தகுதியானவர் – காரணத்தை விளக்கும் வாசிம் ஜாபர்
6. மேலும் அறிமுகமானது முதல் 2016, 2017, 2019 ஆகிய வருடங்களில் நடந்த ஐசிசி தொடர்களிலும் 2021இல் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் டி20 உலக கோப்பையிலும் பும்ரா விளையாடினார். எனவே துரதிஷ்டவசமாக காயமடைந்த அவர் இந்தியாவை விட ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பது சரியான கருத்தாக இருக்காது என்பதே நிதர்சனம்.



