- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிஷேக், பும்ரா இல்ல.. அவர் தான் இந்தியா 2026 டி20 உ.கோ வெல்ல முக்கிய வீரராக இருப்பாரு.. ஏபிடி பேட்டி

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் சூரியகுமார் யாதவ் தலைமையில் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ளது. எனவே இம்முறையும் கோப்பையை வென்று இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதற்கு தேவையான வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் இருக்கிறார். நம்பர் ஒன் பவுலராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணிக்கு வலு சேர்க்கிறார்.

- Advertisement -

முக்கிய வீரர்:

அது போக ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் அவர்களைக் காட்டிலும் ஹர்திக் பாண்டியா தான் இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய வீரராக இருப்பார் என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய பாண்டியா 2 – 3 ஓவர்களில் போட்டியை மாற்ற வல்லவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு பாண்டியாவிடம் தங்கமான கை (கோல்டன் ஆர்ம்) இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஏபி டீ வில்லியர்ஸ் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் நிறைய வீரர்கள் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் திறனை வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள். அது உங்களுக்கு நல்ல சமநிலையுடன் விளையாட உதவும்”

- Advertisement -

தரமான பாண்டியா:

“இந்திய அணியில் ஆரம்பத்திலேயே அபிஷேக் ஷர்மா இருக்கிறார். சஞ்சு சாம்சன் கீப்பராக இருக்கிறார். ரிஷப் பண்ட், சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ஜிதேஷ் சர்மா ஆகியோர் இந்திய அணியில் அதிர்ஷ்டமின்மையால் இடம் பிடிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இருப்பார். அவர் உங்களுக்கு பேட்டிங், பவுலிங் துறைகளில் போட்டிகளை வென்று கொடுக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: லக்ஷ்மன் கீழ் 15 நாட்கள்.. தொடர் தோல்விகளை நிறுத்த இந்திய அணிக்கு புதிய கண்டிஷனை போட்டுள்ள கில்

“போட்டியின் எந்த நேரத்திலும் பந்து வீசக்கூடிய அவரால் பேட்டிங் வரிசையிலும் எங்கு வேண்டுமானால் விளையாட முடியும். குறிப்பாக பேட்டிங்கில் விளையாட வரும் போது அவரை எதிரணி அவுட்டாக்க விரும்புவார்கள். ஏனெனில் பாண்டியா 3 – 4 ஓவர்கள் விளையாடினாலும் நாம் தோற்போம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதே போல பந்து வீச்சில் பாண்டியா வரும் போது எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கக்கூடிய தங்கக்கை வருகிறது என்று நீங்கள் உணர்வீர்கள். எனவே அவர் அணியில் இருப்பது சூர்யகுமாருக்கு சிறந்த சொத்தாகும்” என்று கூறினார்.

- Advertisement -