இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 0 – 3 (3) என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 1 – 3 (5) என்ற கணக்கில் தோற்றது. அதனால் முதல் முறையாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.
அதற்கான பழியை சுமாராக விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா மீது போட்ட தேர்வுக்குழு இங்கிலாந்து தொடருக்கு முன் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன் அவர்களாகவே மரியாதையுடன் ஓய்வை அறிவித்தனர். அடுத்ததாக சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை சமன் செய்து அசத்தியது. அப்படியே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை வென்ற இந்தியா தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
15 நாட்கள் முகாம்:
ஆனால் அடுத்து நடைப்பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணி ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளாததே முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இனிமேல் ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு முன்பாகவும் இந்திய அணி வீரர்கள் 15 நாட்கள் பயிற்சி முகாமில் ஈடுபட வேண்டும் என்று கேப்டன் சுப்மன் கில் நிபந்தனை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் முன்கூட்டியே இந்தியாவுக்கு பயணித்து 15 – 20 நாட்கள் முகாமிட்டு பயிற்சிகளை எடுத்து நன்றாக தயாராகின. அதுவே இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த அவர்களுக்கு மிகப்பெரிய உதவி செய்தது. மறுபுறம் சொந்த மண்ணில் எப்படியும் வெல்வோம் என்ற அசட்டு தைரியத்துடன் விளையாடிய இந்தியா படுதோல்விகளை சந்தித்தது.
லக்ஷ்மன் மேற்பார்வையில்:
எனவே இந்திய வீரர்களும் 15 நாட்கள் பயிற்சி எடுக்க கில் முடிவெடுத்துள்ளார். அந்த முகாம் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் தெரிய வருகிறது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி தெரிவிக்கையில். “டெஸ்ட் தொடருக்கு செல்வதற்கு முன் இந்திய அணி சிறப்பாக தயாராக வேண்டும் என்பதில் கில் தெளிவாக இருக்கிறார். இம்முறை பயணத் திட்டத்தில் சிக்கல் இருந்ததால் இந்திய அணிக்கு தயாராக நேரம் கிடைக்கவில்லை”
இதையும் படிங்க: டி20 உலககோப்பை இந்திய அணியில் அவர் இடம்பெறாததை என்னால் நம்ப முடியவில்லை – பாண்டிங் கருத்து
“டெஸ்ட் தொடருக்கு முன்பாக 15 நாட்கள் முகாம் அமைப்பது சிறப்பாக இருக்கும் என்று கில் வாரியத்திற்கு பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் கௌதம் கம்பீர் வெள்ளைப்பந்து அணிகளின் வேலைகளில் தீவிரமாக இருப்பார். அதனால் டெஸ்ட் முகாம்களை கண்காணிக்க இந்திய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி விவிஎஸ் லக்ஷ்மனை பிசிசிஐ பயன்படுத்தக்கூடும்” என்று கூறினார்.



