
ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. முன்னதாக காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்து அசத்தியது.
பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் இந்தியா ஃபாலோ ஆன் பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது கடைசி விக்கெட்டுக்கு தில்லாக விளையாடிய ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார்கள்.
குறிப்பாக ஆகாஷ் தீப் அட்டகாசமாக விளையாடி 37 ரன்கள் குவித்து இந்தியாவை ஃபாலோ ஆன் பெறும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். இந்நிலையில் அந்த நேரத்தில் ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடவில்லை என ஆகாஷ் தீப் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் லோயர் ஆர்டரில் வருவதால் 20 – 30 ரன்கள் அடிப்பது அணிக்கு மதிப்பு மிக்கதாக இருக்கும்”
“அப்படி பங்காற்ற வேண்டும் என்பதே என்னுடைய மனநிலையாக இருந்தது. அன்று நான் ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்ற பார்க்கவில்லை. மாறாக அவுட்டாகாமல் விளையாட பார்த்தேன். கடவுளின் கருணையால் நாங்கள் ஃபாலோ ஆனிலிருந்து இந்தியாவை எங்களால் காப்பாற்ற முடிந்தது. அது போன்ற சூழ்நிலையிலிருந்து காப்பாற்றியது எங்களுடைய மொத்த அணியின் தன்னம்பிக்கையை உயர்த்தியது”
“அது எங்களுடைய அணியில் எதிரொலித்தது. அதனால் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். முதல் முறையாக நான் இப்போது தான் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறேன். அதனால் பும்ரா பாய் நமக்கான வேலையை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை என்னிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். குறிப்பாக அதிக ஆர்வத்துடன் இருக்காதே என்று அவர் என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: ரோஹித் ஃபார்முக்கு திரும்ப இந்த டெக்னிக் மாற்றதுடன் புதிய இடத்தில் இறங்குனும்.. சஞ்சய் பங்கர் அட்வைஸ்
“மேலும் உங்களுடைய கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னார். இந்திய சூழ்நிலைகளில் என்ன வேலையை செய்தீர்களோ அதை இங்கேயும் செய்யுங்கள் என்று பும்ரா சொன்னார். கடந்த போட்டியில் நாங்கள் பெரும்பாலும் சுமாராக விளையாடி பின்னடைவை சந்தித்தோம். ஆனால் கடைசி போட்டியில் தன்னம்பிக்கை மீண்டும் வந்தது. அது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு முக்கியம். அந்தப் போட்டியில் வெற்றி 50 – 50 அளவு இருக்கும்” என்று கூறினார்.