வயதானால் வீட்டுக்கு போகணுமா? இது போதும் – தினேஷ் கார்த்திக் மீதான விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதிலடி

dinesh
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2018இல் நடைபெற்ற கடைசி ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் முகமது சமி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதைவிட ரவிச்சந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. குறிப்பாக 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுத்த பின் இதுவரை விளையாடிய 13 இன்னிங்சில் 12 முறை கடைசி 5 ஓவரில் களமிறங்கியுள்ளார். அதில் 3 இன்னிங்சில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்பட்ட அவர் 2 இன்னிங்சில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இருப்பினும் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய விக்கெட் கீப்பிங் செய்யும் இளம் வீரர்கள் இருக்கும்போது பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என்று சில முன்னாள் கூறுகின்றனர்.

- Advertisement -

விமர்சனத்தில் டிகே:
அதுபோக சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பினிஷிங் செய்யத் தெரியாதா என்று கேள்வி எழுப்பும் சில முன்னாள் வீரர்கள் பினிசிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து அணியில் ஒரு இடத்தை வீணடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த அவரின் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தபோது உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியில் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 330 ரன்கள் 183.33 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி தன்னை மிகச்சிறந்த பினிஷர் என்று நிரூபித்தார்.

அதனால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் அவர் 37 வயதுக்கு பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையுடன் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது லட்சியத்தில் பாதி தூரத்தை கடந்துவிட்ட அவர் இந்த விமர்சனங்களால் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் உள்ளார்.

- Advertisement -

வீட்டுக்கு போகணுமா:
இந்நிலையில் இளம் வீரர்கள் தான் விளையாட வேண்டும் வயதானவர்கள் விளையாட கூடாதா என்று தினேஷ் கார்த்திக் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா திறமையும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருப்பும் மனதுக்குள் இருந்தால் ஒருவரை தோல்வி நெருங்காது என்று கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் முடிந்து போனவர், அவரால் விளையாட முடியாது, அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும், இது இளம் வீரர்கள் விளையாடும் போட்டி என ஏராளமானவர்கள் தினேஷ் கார்த்திக்கை வீட்டுக்கு போகுமாறு சொல்கிறார்கள். உண்மையில் அவர் என்ன செய்ய போகிறார் என்பது சாத்தியமில்லை என்று நானும் நினைத்தேன்”

“ஆனால் தைரியமுள்ளவர்கள் தோற்க மாட்டார்கள் என்று கூறுவார்கள். மேலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ஒருவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். அந்த வகையில் வெற்றி பெறுவதற்கு தினேஷ் கார்த்திக் ஒரு பினிஷராக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். அவருக்குள் சாதிக்க வேண்டும் என்ற நெருப்பு எரிகிறது, அதை அணைக்க வேண்டாம். அவருடைய கதை இன்னும் முடியவில்லை.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல வேண்டுமெனில் நீங்கள் டாப் 3 இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இல்லையெனில் அதை நெருங்க முடியாது. ஆனால் அது அவருடைய இலக்கல்ல” “அவர் பேட்டிங் வரிசையில் கீழே களமிறங்குகிறார். பினிஷிங் செய்வது மிகவும் கடினமான வேலையாகும்.

இதையும் படிங்க : பந்தை மட்டும் பார்த்து விளையாடுங்கள், பண்ட்க்கு பதிலடி கொடுத்த நடிகையை விளாசும் ரசிகர்கள் – முழுவிவரம்

ஏனெனில் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான திட்டங்களுடன் வரும் பந்துவீச்சாளர்களை சமாளிக்க புது வழியை கண்டுபிடிக்க வேண்டியது கடினமானதாகும். இருப்பினும் அவர் உங்களுக்கு வேண்டிய இடத்தில் பவுலர்களை பந்துவீச வைக்கிறார்” என்று கூறினார். இப்படி விமர்சனங்களுக்கு மத்தியில் தினேஷ் கார்த்திக்க்கு ஆதரவு கொடுக்கும் ஒரே வீரராக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளது தமிழக ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைகிறது.

Advertisement