வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 181 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்த போட்டியில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடாமல் ஓய்வெடுத்தனர்.
சொல்லப்போனால் முதல் போட்டியிலேயே விராட் கோலி பேட்டிங் செய்ய வராத நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து 7வது இடத்தில் விளையாடினார். அந்த நிலையில் 2வது போட்டியில் அவர்கள் கொடுத்த வாய்ப்பை இளம் வீரர்கள் பொன்னாக மாற்றத் தவறியது வேறு கதை. பொதுவாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கு 2 வருடங்கள் முன்பாகவே தேவையான வீரர்களுக்கு வாய்ப்பளித்து உத்தேச பட்டியலை கண்டறிவது அவசியமாகும். மேலும் அந்த உத்தேச பட்டியலில் இருக்கும் வீரர்கள் நிலையான கேப்டன் தலைமையில் கடைசி கட்டத்தொடர்களில் விளையாடினால் மட்டுமே நன்கு செட்டிலாகி உலகக் கோப்பையை வெல்ல முடியும்.
பணிச்சுமை உருட்டு:
ஆனால் அதையெல்லாம் தாண்டி உலகக்கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் இன்னும் நிலையான அணியை கட்டமைக்காமல் இந்தியா சோதனை செய்து கொண்டிருப்பதே ரசிகர்களுக்கு வேதனையாகும். இந்நிலையில் உலகக் கோப்பை நெருங்கி வரும் இந்த சூழலில் முழுமையாக களமிறங்கி விளையாடாமல் பணிச்சுமை என்ற பெயரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுப்பது எந்த வகையிலும் உதவாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 5 நாட்கள் விளையாடி விட்டு ஒரு மாதம் ஓய்வெடுத்த அவர்கள் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் 7 நாட்களையும் முதல் ஒருநாள் போட்டியையும் சேர்த்து வெறும் 8 நாட்கள் மட்டுமே விளையாடிய நிலையில் அதற்குள் பணிச்சுமை வந்து விட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடுவதால் ஓய்வு அவசியமாகும்”
“ஆனால் உண்மை என்னவெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் நடைபெற்ற டெஸ்ட் தொடர் வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதைத்தொடர்ந்து 1 ஒருநாள் போட்டியில் விளையாடிய நீங்கள் மொத்தமாக கடந்த ஒரு மாதத்தில் வெறும் 8 நாட்கள் மட்டுமே விளையாடியுள்ளீர்கள். இது போக இத்தொடரின் 3வது போட்டியை தவிர்த்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா எந்த ஒருநாள் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டியில் முழுமையாக பேட்டிங் செய்யாமல் 2வது போட்டியில் விளையாடாத நீங்கள் 3வது போட்டியில் மட்டும் ஏன் விளையாட வேண்டும்”
“இத்தொடரை தவிர்த்து நீங்கள் நேரடியாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையில் தான் களமிறங்கப் போகிறீர்கள். எனவே உலகக்கோப்பை விரைவில் வரும் இந்த சமயத்தில் எந்த கோணத்தில் பார்த்தாலும் பணிச்சுமை என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கப்போவதில்லை. இருப்பினும் 2வது போட்டியில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஏன் விளையாடவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது”
இதையும் படிங்க:ஆஷஸ் 2023 : ஸ்டூவர்ட் பிராடோடு சேர்த்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரரும் ஓய்வு அறிவிப்பு – விவரம் இதோ
“ஒருவேளை முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சுமாராக செயல்பட்டதால் இந்தியா தங்களுடைய வீரர்களை களமிறக்காமல் சோதனை செய்யலாம் என்று நினைத்ததா? ஒருவேளை அது தான் காரணமாக இருந்தால் இந்த போட்டியில் வெறும் நீங்கள் 181 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளீர்கள். அதனால் ஷாய் ஹோப் போன்ற முக்கிய வீரர்களை அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஓய்வெடுக்க சொல்லலாமா? எனவே உலகக்கோப்பை இன்னும் வெகு தொலைவில் இல்லாத சமயத்தில் இது போன்ற மாற்றங்கள் மற்றும் சோதனைகள் தேவையற்றது என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.