இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இறுதியில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்றதனால் இந்த ஆசஷ் தொடரின் வெற்றியாளராக இரண்டு அணிகளுமே அறிவிக்கப்பட்டு கோப்பை பகிரப்பட்டது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த 5-ஆவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஸ்டூவர்ட் பிராட் ஓய்வை அறிவித்து ரசிகர்களின் மத்தியில் பிரியா விடை பெற்று வெளியேறினார். அவரது இந்த ஓய்வு அறிவிப்பு அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் மேலும் ஒரு வீரராக மொயின் அலியும் இதுதான் எனக்கு கடைசி டெஸ்ட் என்று போட்டி முடிந்த பின்னர் அறிவித்தார். இதுகுறித்து பேசிய மொயின் அலி கூறுகையில் : இந்த ஆசஷ் தொடர் எனக்கு ஒரு நல்ல கம்பேக் தொடராக இருந்தது. அதுமட்டும் இன்றி மறக்க முடியாத தொடராகவும் அமைந்தது.
ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன் என்றோ, விக்கெட்டை வீழ்த்துவேன் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. ஓய்வில் இருந்து வெளியே வர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் எனக்கு மெசேஜ் செய்த காரணத்தினால் நான் மீண்டும் இந்த தொடரில் விளையாட வந்தேன்.
ஆனால் இதுவே எனக்கு கடைசி டெஸ்ட் போட்டி மீண்டும் எனக்கு ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன் என்று மொயின் அலி கலகலப்பாக பேசினார். மேலும் இதுதான் எனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்றும் இனிமேல் நான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்க்கு திரும்ப மாட்டேன் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க : Ashes 2023 : சீட்டிங் பண்ணி இங்கிலாந்து ஜெயிச்சுட்டாங்க, ஐசிசி விசாரணை பண்ணனும் – பாண்டிங் கோரிக்கை, நடந்தது என்ன?
கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மொயின் அலி அதன்பிறகு ஸ்டோக்ஸ் அழைத்ததன் காரணமாகவே இந்த ஆசஷ் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயதான அவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3094 ரன்களையும், 201 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.