Ashes 2023 : மோசம் பண்ணி இங்கிலாந்து ஜெயிச்சுட்டாங்க, ஐசிசி விசாரணை பண்ணனும் – பாண்டிங் கோரிக்கை, நடந்தது என்ன?

- Advertisement -

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்ற ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருந்ததால் கோப்பையை தக்க வைத்து அசத்தியுள்ளது. அந்த நிலையில் லண்டனில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து சற்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 395 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பாண்டிங் அதிருப்தி:
அதை தொடர்ந்து 384 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர். அதனால் 140/0 என்ற துவக்கத்தை பெற்ற அந்த அணியை 334 ரன்களுக்கு சுருட்டி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 2 – 2 (5) கணக்கில் இத்தொடரை சமன் செய்து 2001க்குப்பின் 22 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றியது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இந்த போட்டியில் 384 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் – கவாஜா ஜோடி 140 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுக்கும் அளவுக்கு இங்கிலாந்தின் பவுலிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக மகத்தான ஸ்விங் பவுலராக கருதப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட அனைத்து இங்கிலாந்து பவுலர்களும் பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் திண்டாடினார்கள். அதனால் ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37வது ஓவரில் மார்க் வுட் வீசிய ஒரு பந்து அதிகப்படியான பவுன்ஸாகி கவாஜா தலையில் அடித்தது. அப்போது வழக்கம் போல பந்தை வரையறுக்கப்பட்ட வளைவு சோதனை கருவியில் நுழைத்து ஜோயல் வில்சன் மற்றும் குமார் ஆகிய நடுவர்கள் சோதித்துப் பார்த்தனர்.

- Advertisement -

அந்த சோதனையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் பந்தின் வடிவம் மாறியதாக கருதி அவர்கள் வழக்கம் போல விதிமுறைகளுக்குட்பட்டு வேறு பந்தை வரவழைத்து இங்கிலாந்தினரிடம் கொடுத்தனர். ஆனால் அந்தப் பந்தை கையில் எடுத்ததுமே தீயாக செயல்பட்ட இங்கிலாந்து பவுலர்கள் கவாஜா, வார்னர், லபுஸ்ஷேன் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களை குறுகிய இடைவெளிக்குள் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தி இறுதியில் மிகச் சிறப்பாக போராடி வெற்றி கண்டனர்.

இருப்பினும் திடீரென அந்த சமயத்தில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே முற்றிலும் பளபளப்பான புதிய பந்து கொண்டுவரப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதற்கு பந்தை நாங்கள் மாற்றவில்லை நடுவர்கள் தான் கொடுத்தனர் என்று பதிலடி கொடுத்த இங்கிலாந்து ரசிகர்கள் உங்களைப் போல் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் ஆஸ்திரேலியர்களுக்கு தக்க பதிலளித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்த சமயத்தில் முற்றிலும் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பங்கிற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது”

இதையும் படிங்க:IND vs WI : வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி நடைபெறும் பிரைன் லாரா மைதானம் எப்படி? மழை வருமா – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

“பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியதை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்பு முனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement