
இந்திய கிரிக்கெட் அணியை சுற்றி இப்போதெல்லாம் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக முக்கிய விஷயங்கள் தொடர்பாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே சில இணையதளங்களில் அது பற்றிய செய்திகள் வந்து விடுகின்றன. இது போக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சந்தித்த தோல்விகளால் இந்திய அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்று முதலில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்தன. அப்படி கேப்டன்ஷிப் நியமனம் முதல் வீரர்கள் தேர்வு வரை பல செய்திகள் பிசிசிஐ வெளியிடுவதற்கு முன்பே க்ரிக்பஸ் போன்ற தனியார் இணையதளங்களில் வெளியாவது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிட்டான்சு கோட்டக் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.
இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும் உள்ளூரில் அவர் 150க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே அவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படி இந்திய அணி பற்றிய தகவல்கள் தொடர்ந்து முன்னதாகவே கசிவது எப்படி? என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிசிசிஐ ஆரம்பத்திலேயே செய்தியை வெளியிடுவது அதை நிறுத்துவதற்கான ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிட்டான்சு கோட்டக் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளார் என்பது பெரிய செய்தியாகும். அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்”
“அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும். ஆனால் அதற்கு முன் இந்த செய்திகள் எப்படி வெளியாகின்றன? அதை நிறுத்த ஏன் பிசிசிஐ முன்னதாகவே செய்தியை சொல்லக்கூடாது? நீங்களே ஆரம்பத்தில் சொல்லிவிட்டால் இது போன்ற தகவல் அடிப்படையிலான செய்திகள் நின்று விடும். கோட்டக் நீண்ட காலமாக இந்திய பயிற்சியாளர் குழுவில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார்”
இதையும் படிங்க: 752 ரன்ஸ் அடிச்சாலும் கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் சான்ஸ் கிடைக்காது.. காரணம் இது தான்.. டிகே வெளிப்படை
“அவர் எனக்கு எதிராகவும் விளையாடியுள்ளார். எங்களுக்கு எதிராக அவர் நிறைய ரன்கள் அடித்துள்ளார். நேராக இருக்கும் திரையின் அருகே யாராவது நகர்ந்தால் உடனே அவர் தன்னுடைய ஆட்டத்தை நிறுத்தி விடுவார். அவர் தனித்துவமான பிளேயிங் ஸ்டைலயும் கொண்டிருந்தார். உள்ளூரில் ரன் மெசினான அவர் தன்னுடைய வித்தியாசமான ஐடியாக்களால் எதிரணிகளுக்கு தொல்லையை கொடுத்தார்” என்று கூறினார்.