ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஷிகர் தவான் ஓய்வு பெற்றுள்ளதால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதல் வீரராக 18 கோடிக்கு தக்க வைக்க யாருமே இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது ரிக்கி பாண்டிங் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளதால் சாம் கரண், லியம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ போன்ற இங்கிலாந்து வீரர்களை கழற்றி விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா அளவுக்கு சமமில்லாத அர்ஷ்தீப் சிங்கை ஆர்டிஎம் பயன்படுத்தி பஞ்சாப் மீண்டும் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
18 கோடிக்கு யாருமில்லை:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புதிய பயிற்சியாளர் புதிதாக சிந்தித்து புதிய அணுகு முறையை கடைப்பிடிப்பார். புதிதாக வந்துள்ள பயிற்சியாளர் யாரையாவது தக்க வைப்பாரா? பஞ்சாப் அணியில் 18 கோடிக்கு தகுதியுள்ள வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத சில தரமான வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளனர்”
“ஆனால் அவர்கள் 18 கோடிக்கு தகுதியானவர்களா? கடந்த வருடங்களில் பஞ்சாப் சாம் கரணை தக்க வைக்க நிறைய பணத்தை செலவிட்டது. இங்கிலாந்து வீரர்களையும் அவர்கள் தக்க வைத்து கொண்டனர். ஆனால் தற்போது ரிக்கி பாண்டிங் வந்துள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் கதவுக்கு வெளியே நிற்பார்கள். சாம் கரண், லியான் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்ட்ரோ, கிறிஸ் ஓக்ஸ் ஆகியோர் செல்வார்கள் என்று நான் கருதுகிறேன்”
பாண்டிங் அணுகுமுறை:
“பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங்கை நான் தக்க வைக்க விரும்புகிறேன். ஆனால் அவரை 18 கோடிக்கு தக்க வைக்க முடியாது. எனவே அவரை அணியிலிருந்து விடுவித்து பின்னர் ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம். ஏனெனில் மெகா ஏலத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரும் 18 கோடிக்கு தக்க வைக்கும் அளவுக்கு தகுதியை கொண்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: விராட் கோலி இல்லனா ஆர்சிபி இல்ல.. ஃபப், சிராஜை கழற்றி விடுங்க.. பெங்களூரு 4 ரிட்டன்சன் பற்றி ஆகாஷ் சோப்ரா
அவர் கூறுவது போல மேற்குறிப்பிட்ட 4 இங்கிலாந்து வீரர்களும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றிகளில் பங்காற்றவில்லை. அதே போல பஞ்சாப் அணி சாதாரணமாகவே வீரர்களை கழற்றி விட்டு அடிக்கடி மாற்றங்களை செய்யக்கூடிய அணியாகும். அதனால் இம்முறை ப்ரீத்தி ஜிந்தா பெரும்பாலான வீரர்களையும் கழற்றி விட்டு புதிய அணியை உருவாக்குவார் என்று நம்பலாம்.