IND vs SA : ஆஹா என்ன ஒரு தரமான இன்னிங்ஸ், கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் கைதட்டி பாராட்டி முழு ஆதரவு

KL-RAHUL
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக நடைபெறும் இந்த கடைசி டி20 தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் அனலான பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாத தென் ஆப்ரிக்கா 20 ஓவர்களில் 106/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் கேப்டன் பவுமா, டீ காக் உள்ளிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 9/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியின் மானத்தை மார்க்ரம் 25 (24) ரன்களும் கேசவ் மகாராஜ் 41 (35) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் டக் அவுட்டாக விராட் கோலி 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதனால் 17/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று இந்தியா தடுமாறினாலும் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல முதல் பந்திலிருந்து அதிரடியை வெளிப்படுத்தி 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) விளாசி பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சுயநல இன்னிங்ஸ்:
ஆனால் அவருக்கு முன்பாக தொடக்க வீரராக களமிறங்கி திண்டாடிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் தனது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் விளையாடி கிட்டதட்ட 10 ஓவர்கள் எதிர்கொண்டு மெதுவாக பேட்டிங் செய்த போதிலும் கடைசி வரை அதிரடியை துவைக்காமல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுத்தார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக அரை சதமடித்த வீரர் என்ற மோசமான உலக சாதனை படைத்துள்ள அவர் மீண்டுமொரு முறை தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அணியின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் சுயநலத்துடன் விளையாடியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

ஏனெனில் வெறும் 107 என்றிருந்த இலக்கு 130+ ரன்களாக இருந்தால் கூட நிச்சயம் அவர் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸ் தோல்வியை பரிசளித்திருக்கும். இருப்பினும் பார்மின்றி தவிக்கும் அவருக்கு இந்த இன்னிங்ஸ் ஃபார்முக்கு திரும்புவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும் என்ற ஆதரவு கருத்துக்களும் வருகின்றன. குறிப்பாக பேட்டிங்க்கு கடுமையாக சவால் கொடுத்த திருவனந்தபுரம் மைதானத்தில் 107 என்ற குறைவான இலக்கைத் துரத்தும் போது ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி கவலைப்படாமல் இலக்கையும் சூழ்நிலையையும் சமாளித்து கடினமாக உழைத்து கேஎல் ராகுல் வெற்றி பெற வைத்ததாக விமர்சனத்திற்கு நிகரான ஆதரவும் குவிந்து வருகிறது.

- Advertisement -

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா போட்டியின் புரிதல் இல்லாமல் அனைவரும் ராகுலை விமர்சிப்பதாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ராகுல் மிகச் சிறந்த தரமான இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்ததாகவும் அவர் கைதட்டி பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“நேற்று இரவு கேஎல் ராகுலின் பேட்டிங் அணுகு முறை குறித்த விமர்சனங்கள் தவறாக இடம் பிடித்துள்ளன. பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக இருந்த காரணத்தாலேயே எதிரணி 20 ஓவர்களில் வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அத்துடன் உங்களுடைய அணியும் பெரிய ரன்கள் அடிக்காமல் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. அந்த வகையில் அந்த சவாலை எதிர்த்து கேஎல் ராகுல் தரமான டாப் இன்னிங்ஸ் விளையாடினார். நன்றாக விளையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மை தான் என்றாலும் சுமார் 10 ஓவர்கள் விளையாடி முழுமையாக செட்டிலான பின்பும் கடைசியில் 100 ஸ்ட்ரைக் ரேட்டை கூட தாண்ட முடியாதது கிளாஸ் நிறைந்த ராகுல் போன்ற பேட்ஸ்மேனுக்கு அழகல்ல என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

இதையும் படிங்க : IND vs SA : அந்த கண்டத்துக்கு பரிகாரம் இருந்தா சொல்லுங்க – இந்திய ரசிகர்கள் கவலையுடன் கோரிக்கை

மேலும் அதே பிட்ச்சில் தான் சூரியகுமார் யாதவும் ஆரம்பத்தில் சில பந்துகளை பொறுமையாக ஏற்றுக் கொண்டு அதன் பின் அதிரடியை துவக்கி 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வெற்றி பெற வைத்ததாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement