IND vs SA : அந்த கண்டத்துக்கு பரிகாரம் இருந்தா சொல்லுங்க – இந்திய ரசிகர்கள் கவலையுடன் கோரிக்கை

INDIA Arshdeep Singh Harshal Patel
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சுக்கு சாதகமான திருவனந்தபுரம் மைதானத்தில் முதலில் நெருப்பாக பந்துவீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 106/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 41 (35) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 107 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்ற விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார். அதனால் 17/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மற்றொருபுறம் நங்கூரமாக நின்ற கேஎல் ராகுல் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க மெதுவாக விளையாடினார். ஆனால் அவருடன் அடுத்ததாக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்கள் விளாசி சிக்சருடன் பினிஷிங் செய்து 16.4 ஓவரில் 110/2 ரன்களை எடுத்து வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

தீராத கண்டம்:
அவருடன் கடைசி வரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று விமர்சனங்களை சந்தித்தது.

இருப்பினும் அதற்காக துவளாமல் அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து தற்போது தென் ஆப்பிரிக்காவை சாய்க்க துவங்கியுள்ள இந்தியா மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. ஆனால் ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியடைவதற்கு 19வது ஓவர் கண்டமாக இருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக 19வது ஓவரில் முறையே 25, 19 ரன்கள் தேவைப்பட்ட போது பந்து வீசிய புவனேஸ்வர் குமார் கொஞ்சமும் அனுபவத்தை காட்டாமல் முறையே 19, 14 ரன்களைக் கொடுத்து வெற்றியை தாரை வார்த்தார்.

- Advertisement -

அதனால் விமர்சனங்களை சந்தித்த அவருக்கு மீண்டும் மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அதே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போதும் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரில் 18 ரன்கள் கொடுத்த அவர் வெற்றியை தாரை வார்த்தார். அந்த நிலைமையில் நேற்று பவுமா 0, டீ காக் 1, ரோசவ் 0, மில்லர் 0, ஸ்டப்ஸ் 0 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் பௌலிங்க்கு சாதகமான திருவனந்தபுரத்தில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றியதால் 9/5 என தடுமாறிய தென் ஆப்பிரிக்கா 50 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மிடில் ஆர்டரில் மார்க்ரம் 25, பர்ணல் 24 என முக்கிய பேட்ஸ்மென்கள் ஓரளவு காப்பாற்றி நிலையில் கடைசி நேரத்தில் கேசவ் மகாராஜ் போராடினார். அப்போது புவனேஸ்வர் குமார் இல்லாத நிலைமையில் எஞ்சிய ஓவர்களை சிறப்பாக வீசி ஏற்கனவே 3 விக்கெட்டுகள் எடுத்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் அதே 19வது ஓவரில் 4, 6, 1, 1, 4, 1 என 17 ரன்களை வாரி வழங்கினார்.

இப்படி போட்டி மாறினாலும் புவனேஸ்வர் குமார் இல்லாமல் போனாலும் பவுலர் மாறினாலும் எதிரணி திண்டாடினாலும் 19வது ஓவரில் மட்டும் இந்தியா ரன்களை வாரி வழங்குவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை பார்க்கும் ரசிகர்கள் இந்த கண்டத்தில் இருந்து தப்பிக்க ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்ற வகையில் சமூக வலைதளங்களில் வல்லுனர்களிடம் கவலை தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் நேற்றைய போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம், நல்ல ஓபனிங் பவுலிங் கிடைத்ததால் தப்பிய இந்தியா இதுவே வேறொரு சூழ்நிலையில் இதே 19வது ஓவரில் 17 ரன்கள் கொடுத்தற்கு நிச்சயம் தோற்றிருக்கும் என்றே கூறலாம். எனவே 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்குவதை தடுக்க இந்திய பவுலர்கள் மெனக்கெட்டு ஸ்பெஷல் பயிற்சிகளை எடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement