
ட்ரினிடாட் நகரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 29-ஆம் தேதியான நேற்று துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 190/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக செயல்பட்டு 64 (44) ரன்கள் விளாச கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டைய கிளப்பிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்களை விளாசி சூப்பர் பினிசிங் கொடுத்தார்.
அதை தொடர்ந்து 191 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15, சமர் ப்ரூக்ஸ் 20 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் காப்பாற்ற வேண்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18, ரோவ்மன் போவல் 14, சிம்ரோன் ஹெட்மயர் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்து. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அஷ்வின், பிஷ்னோய், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
புதிய ஓப்பனிங்:
அதனால் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் கேஎல் ராகுல் காயமடைந்துள்ள நிலையில் சமீப காலங்களில் அசத்திய இஷான் கிஷனையும் கண்டுகொள்ளாத அணி நிர்வாகம் இங்கிலாந்து தொடரில் வித்தியாசமாக ரிஷப் பண்ட்க்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுத்தது.
அதில் அவர் ஓரளவு சுமாராக செயல்பட்ட நிலையில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் தீபக் ஹூடாவும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டனர். இப்படி ஏற்கனவே 4 – 5 பேட்ஸ்மேன்கள் தொடக்க வீரராக களமிறங்குவதற்கு தயாராக இருக்கும் நிலையில் 3, 4 ஆகிய இடங்களில் சிறப்பாக விளையாடக் கூடிய சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்க வேண்டிய அவசியம் ஏன் என்று இந்திய அணி நிர்வாகத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இசை நாற்காலி:
இசை நாற்காலியை போல் சமீப காலங்களில் ஓபனிங் ஜோடி அடிக்கடி மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அவர் இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஓபனிங் ஜோடியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இசை நாற்காலியை போல் ஏன் அவர்களை அடிக்கடி மாற்றுகிறார்கள்? தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகத்துக்கு என்னுடைய கேள்வி என்னவெனில் ஓப்பனிங் ஜோடியில் சுழலும் கதவை திறந்து விட்டீர்களா? கடந்த தொடருக்கும் இந்த தொடருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? விராட் கோலி இல்லாத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அவரிடத்தில் விளையாடுவது சரி”
“ஆனால் கடந்த தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறக்கிய நீங்கள் தற்போது சூரிய குமார் யாதவை ஏன் களமிறக்கி உள்ளீர்கள். இதை பார்த்தால் கேஎல் ராகுல் வந்தால் அவர் விராட் கோலியுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதைப் போல் உள்ளது. சமீப காலங்களில் நீங்கள் ஓபனிங் ஜோடியில் 25 மாற்றங்களை செய்து விட்டீர்கள். அதேப்போல் ஒருநாள் தொடரில் மிரட்டிய சுப்மன் கில் உங்களுடன் உள்ளார். இப்படி தொடக்க வீரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அதனால் எத்தனை வீரர்களை தொடக்க வீரர்களாக களம் இறக்குவீர்கள் என்பது புரியவில்லை”என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதே அம்சத்தைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் பேசியது பின்வருமாறு. “எதனால் இதை செய்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரிஷப் பண்ட்க்கு சில போட்டிகளில் வாய்ப்பளித்த நீங்கள் குறைந்தது அவருக்கு 5 வாய்ப்பு கொடுங்கள். கேப்டன் ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணி வீரர்களுக்கு குறைந்தது 5 – 6 போட்டிகளில் ஆதரவு கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : IND vs WI : அவரை பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் தெறிச்சு ஓடுறாங்க – இந்திய பவுலரை பாராட்டும் ஆகாஷ் சோப்ரா
“பொதுவாகவே மிடில் ஆர்டரில் களமிறங்கி பினிஷிங் செய்வதே சூரியகுமாரின் வேலையாகும். குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி வரும்வரை அவர் 4-வது இடத்தில் விளையாட வேண்டும். எனவே நீங்கள் ரிஷப் பண்ட்டை இந்த முயற்சியில் சோதித்து பார்க்கலாம். இஷான் கிசனும் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த முடிவு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது புரியவில்லை” என்று கூறினார்.