ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் அதன் பின் பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து சென்னை தோற்றது. அடுத்ததாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லியிடம் 15 வருடங்களுக்கு பின் தோல்வியை சந்தித்தது.
அப்படி ஹாட்ரிக் தோல்விகளை பெற்ற சென்னை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விகளுக்கு தோனி தான் காரணம் என்றும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 43 வயதில் விக்கெட் கீப்பிங் செய்வதில் அசத்தும் தோனி பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கி வருகிறார்.
டெஸ்ட் ஆட்டம்:
இருப்பினும் இந்த வருடம் ஆரம்பத்திலேயே சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள். மறுபுறம் தோனியும் லோயர் மிடில் ஆர்டரில் மெதுவாகவே விளையாடி தோல்வியை உறுதி செய்கிறார். குறிப்பாக டெல்லிக்கு எதிரானப் போட்டியில் முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 74-5 என சென்னை சரிந்தது.
அப்போது விஜய் சங்கர் – தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து விக்கெட்டை விடாமல் நிதானமாக விளையாடினர். ஆனால் அதற்காக 15 ஓவர்களுக்குப் பின்பும் அப்படியே விளையாடிய அவர்கள் வெற்றியைக் கோட்டை விட்டார்கள். அவர்களது ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல இருப்பதாக எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.
கலாய்த்த சித்து:
சொல்லப்போனால் தோனி – விஜய் சங்கர் ஆட்டம் சுவாரசியம் இல்லாமல் இருந்ததால் அதைப் பார்க்க ஆர்வமில்லாத சிஎஸ்கே அணியின் இளம் வீரர் வன்ஸ் பேடி பெவிலியனில் குறட்டை விடாதக் குறையாக தூங்கினார். அதே போல 13வது ஓவரின் மூன்றாவது பந்தை மோகித் சர்மா நோபால் போட்டதால் ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. அதை எதிர்கொள்ளும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்ததால் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர்.
இதையும் படிங்க: நல்லவேளை நல்லதுக்கு தோத்துட்டோம்.. ராஜஸ்தானிடம் தோற்க இதான் காரணம்.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
அப்போது முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து நேரலையில வர்ணித்தது பின்வருமாறு. “இங்கே எந்தப் போட்டியும் கிடையாது. வென்றாக வேண்டியக் கட்டாயத்தால் தோனி சிக்ஸர் அடிக்கச் செல்ல வேண்டும். 15 ரன்ரேட் தேவைப்படும் இந்த நேரத்தில் அதிரடி இல்லையென்றால் எப்போது? அனைத்து ரசிகர்களும் சிக்ஸரை எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை சிக்ஸர் அடிக்கப்பட்டால் மைதானம் வெடிக்கும் அளவுக்கு சத்தம் வரும்” என்று கூறினார். கடைசியில் மோஹித் சர்மா வீசிய பவுன்சர் பந்தை தோனி அடிக்காமல் விட்டதால் சித்து கலாய்த்தது பின்வருமாறு. “ஓ இது புஸ்வானம் பட்டாசாக வெடித்துள்ளது” என்று கூறினார்.



