ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடர் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் அந்தந்த நாட்டு வாரியங்கள் அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா வரும் ஆகஸ்ட் 28இல் பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகள் பரபரப்பாக இருக்கும் என்ற நிலைமையில் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் மோதாமல் இது போன்ற ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதுகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளின் மவுசு முன்பை விட பல மடங்கு எகிறியுள்ள நிலையில் கடைசியாக இதே துபாய் மண்ணில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மோதிய போது 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை உலக கோப்பையில் தோற்கடித்து புதிய சரித்திரம் படைத்தது.
வெல்லப்போவது யார்:
அதனால் லீக் சுற்றுடன் வெளியேறி அவமானத்தை சந்தித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் சமீபத்திய தொடர்களில் இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை சாய்த்து நல்ல பார்மில் இருக்கும் இந்தியா இம்முறை பாகிஸ்தானை தோற்கடித்து பழிவாங்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் அனல் பறக்க போகும் இந்த போட்டியில் இரு அணிகளிலுமே ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் மற்றும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி போன்ற உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அதன் காரணமாக இவ்விரு அணிகளும் சரி சமமாக மோதிக்கொள்ளும் என்பதால் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் என்னதான் பாபர் அசாம் போன்ற தரமான வீரர்கள வீரர்கள் இருந்தாலும் இந்தியாவிடம் இருக்கும் ஹர்திக் பாண்டியா போன்ற தரமான ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானில் இல்லாதது பின்னடைவு தான் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
பழைய பாண்டியா:
இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கிடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும் வீரராக பாண்டியா இருப்பதாகத் தெரிவிக்கும் அவர் அதன் காரணமாக இந்தியா வென்றால் ஆச்சரியப்பட அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த இரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் அவர்களின் பேட்டிங்கில் உள்ளது. அதில் இந்தியா சற்று அதிக அனுபவமுடைய பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அதிலும் ரோகித் சர்மா போன்ற ஒருவருக்கு அன்றைய நாள் கிளிக் ஆனால் அவர் மட்டும் தனி ஒருவனாக போட்டியை வென்று கொடுத்துவிடுவார். அதேபோல் கட்டுப்பாட்டுடன் விளையாடினால் பாகிஸ்தானுக்கு பாகர் ஜமான் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்”

“ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் தான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறது. அதை விட அவர்களின் ஆல்ரவுண்டர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக உள்ளார். ஏனெனில் பாகிஸ்தானிடம் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்-ரவுண்டர் கிடையாது” என்று கூறினார். அவர் கூறுவது போல பாகிஸ்தானில் பாண்டியாவை போன்ற நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடையாது என்பது உண்மையாகும்.
மறுபுறம் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உருவெடுத்த ஹர்திக் பாண்டியா 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்துவீச தடுமாறிய நிலையில் கடந்த வருடம் நடந்த டி20 உலகக் கோப்பையில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டார். அதனால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் அணியை அற்புதமாக வழிநடத்தி கோப்பையை வென்று மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டை போட்டியாக அல்லாமல் பொழுதுபோக்காக விளையாடினார் – சேவாக் அதிரடி ரகசியத்தை வியக்கும் ஜாம்பவான்
அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அடுத்தடுத்த டி20 தொடர்களில் ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் மீண்டும் அதே பழைய பாண்டியாவாக பார்முக்கு திரும்பி இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



