கிரிக்கெட்டை போட்டியாக அல்லாமல் பொழுதுபோக்காக விளையாடினார் – சேவாக் அதிரடி ரகசியத்தை வியக்கும் ஜாம்பவான்

- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவர். சச்சின் போல நடுத்தரமாகவும் அல்லாமல் டிராவிட் போல பொறுமையாகவும் அல்லாமல் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் அதிரடியாக மட்டுமே எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவனாக போற்றப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் தொடக்க வீரராக களமிறங்கும் அவர் சந்திக்கும் முதல் பந்திலேயே ஆஃப் சைடில் பவுண்டரியை பறக்கவிட்டு தனக்கென ஒரு டிரேட்மார்க் ஸ்டைலை வைத்துள்ளார்.

Sehwag

- Advertisement -

அதனால் சச்சினை கூட சமாளித்து விடலாம் ஆனால் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை காட்டிய அவருக்கு பந்து வீச கஷ்டப்படுவதாக முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பிரெட் லீ சமீபத்தில் பாராட்டியிருந்தார். அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரில் வீரேந்திர சேவாக்குடன் இணைந்து விளையாடிய தருணங்கள் மறக்க முடியாதது என்று நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் பாராட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்ற நிலையில் தனது வாழ்க்கை வரலாற்றை பற்றிய சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

இனிமையான சேவாக்:
அதில் மாநிறத்தில் இருந்ததால் நியூசிலாந்து அணிக்குள்ளேயே நிறவெறி கேலி கிண்டல்களுக்கு உள்ளானதாக தெரிவித்த அவர் 2011 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது ஒரு முக்கிய போட்டியில் டக் அவுட்டானதால் அதன் உரிமையாளர் 2 – 3 முறை கன்னத்தில் அறைந்ததாக கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடிய பின் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஏற்பட்ட அனுபவங்களை தனது 3வது அத்தியாயத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Taylor

குறிப்பாக ஒரு போட்டியை முடித்துவிட்டு சேவாக் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று சக அணி வீரர்களுடன் பிரபல கால்பந்து போட்டியை ரசித்து பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் அன்றைய நாளில் தமக்கு மிகவும் பிடித்த இறால் உணவை விருந்தாக படைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அடுத்த நாள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தாம் தடுமாறிக் கொண்டிருந்தபோது இறால்களை விரும்பி உண்டதை போல ஜாலியாக பேட்டிங் செய்யுமாறு அறிவுறுத்தியதை நினைத்து ஆச்சரியப்படுவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

சேவாக் ரகசியம்:
அவர் ஆலோசனை கொடுத்த அந்த தருணத்தில் கிரிக்கெட்டை போட்டியாக பார்க்காமல் விளையாட்டாக பார்ப்பதாலேயே அவரால் இப்படி யோசிக்க முடிகிறது என்று உணர்ந்ததாக தெரிவிக்கும் ராஸ் டைலர் அதுவே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதையும் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். இது பற்றிய தனது புத்தகத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நாங்கள் சேவாக் அவர்களின் உணவு விடுதியில் சிறந்த இரவை கழித்தோம். அன்றைய நாளில் எங்களது அணியினர் மான்செஸ்டர் மற்றும் குயின்ஸ் பார்க் அணிகள் மோதிய கால்பந்து போட்டியை பெரிய திரையில் பார்த்தோம்”

Sehwag 1

“பிரீமியர் லீக் தொடரின் அந்த இறுதிப் போட்டியில் செர்கியோ ஆகுரோ மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 – 2 என்ற கணக்கில் 44 வருடங்கள் கழித்து மான்செஸ்டர் கோப்பையை வெல்ல உதவினார். அதை பார்த்துக்கொண்டே நான் சாப்பிட்ட இறால் உணவு அதைவிட அபார சுவையாக இருந்தது. அதனால் அதை சாப்பிடுவது என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் அதை சாப்பிட்டு நான் ஒரு பன்றியைப் போல் உருவாகிறேன் என்பதை சேவாக் அறிந்திருப்பதை நான் உணரவில்லை”

“அடுத்த நாள் நாங்கள் விளையாடிய போது மைதானத்தின் அனைத்து இடங்களிலும் சேவாக் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஆனால் நான் உட்பட எஞ்சிய வெளிநாட்டு வீரர்கள் அப்போட்டியில் தடுமாறினோம். நான் பெரிய தொகைக்கு வாங்கப் பட்டிருந்ததால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பதற்றத்தால் தடுமாறிக் கொண்டிருந்தேன். இருப்பினும் மறுபுறம் எவ்வித பதற்றமும் இல்லாமல் விளையாடிய சேவாக் என்னருகே வந்து எனது கையுடன் அவரது கையை மோதிவிட்டு “ராஸ், நேற்று இரவு நீங்கள் இறால்களை விரும்பி சாப்பிடுவதை போல் பதற்றமடையாமல் பேட்டிங் செய்யுங்கள்”

Virender Sehwag

“அப்போது கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்காக நினைத்து அவர் வேடிக்கையாகவும் ஜாலியாகவும் விளையாடுகிறார் என்பதை புரிந்து கொண்டேன். அப்போது முதல் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் கூறிய இறால் உணவு ஆலோசனை தான் எனக்கு நினைவுக்கு வரும்” என்று கூறினார். டெல்லி அணிக்காக ஒரு சீசனில் மட்டும் விளையாடிய ராஸ் டைலர் 16 இன்னிங்சில் 256 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement