ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 192 ரன்கள் அடித்தும் இந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
பெங்களூரு அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : அஜின்க்யா ரஹானே
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது : இந்த போட்டியில் 190 ரன்கள் வரை அடித்தது வெற்றிக்கு போதுமான இலக்கு என்று நினைத்தோம். ஏனெனில் இந்த ஆடுகளத்தில் புதிதாக வரும் வீரர்கள் வந்தவுடன் அதிரடியாக விளையாட முடியாது. அதனால் இந்த ரன்கள் போதும் என்று நினைத்தோம்.
இருந்தாலும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் இந்த போட்டியில் இன்னும் கடினமான போட்டியை அளித்திருக்கலாம். கடந்த மூன்று நான்கு ஆட்டங்களாகவே எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த போட்டியின் போது விராட் கோலியின் கேட்சை எங்களது வீரர்கள் கோட்டை விட்டது மிகப்பெரிய வித்தியாசமாக பார்க்கிறேன்.
இதையும் படிங்க : முக்கியமான நேரத்துல எல்லாம் கைகூடி வருது.. கொல்கத்தாவை வீழ்த்திய பின்னர் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
ஏனெனில் விராட் கோலி போன்ற ஒரு அற்புதமான வீரருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிச்சயம் எதிரணியை வீழ்த்தி விடுவார். இந்த போட்டியில் அவரது பேட்டிங் அந்த அணியின் சேசிங்கிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அதேபோன்று தேவ்தத் படிக்கலும் அற்புதமாக விளையாடியிருந்தார். இந்த தொடர் முழுவதுமே எங்களுடைய பீல்டிங் சுமாராகவே இருந்துள்ளது அதன் காரணமாகவும் நாங்கள் சில போட்டிகளை இழந்துள்ளோம் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.



