இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை கூட எட்டாமல் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் கேப்டன்சி, மட்டுமின்றி பேட்டிங்கிலும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த 2026-ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 28 ரன்கள் சராசரியுடன் 312 ரன்கள் மட்டுமே குவித்தார்.
உறுதியான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் டிரேடிங் :
கடந்த 2025-ஆம் ஆண்டும் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 24 ரன்கள் சராசரியுடன் 269 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் அந்த அணியின் நிர்வாகத்தினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஏனெனில் 2025 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய விலைக்கு வாங்கப்பட்ட அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும் என்று லக்னோ அணியின் நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் கேப்டனாகவும் சரி, தனிப்பட்ட முறையில் பேட்ஸ்மேனாகவும் சரி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாததால் அவரை வெளியேற்ற அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு முன்னதாக தானாகவே முன்வந்து லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் வெளியேறி வேறு அணிக்கு செல்ல காத்திருந்தார். இவ்வேளையில் ரிஷப் பண்ட் டிரேடிங் குறித்த தகவல் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாக இருந்து வந்தது.
இவ்வேளையில் இன்று ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையேயான டிரேடிங் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றதாக பி.சி.சி.ஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட பண்ட் தற்போது 15 கோடி ரூபாய்க்கு டெல்லி அணிக்கு வழங்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு டெல்லி அணியின் நிர்வாகம் ரிஷப் பண்ட்டை 15 கோடிக்கு தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற ஸ்டீபன் பிளமிங்.. தோனி தான் சப்போர்ட்டாம் – வெளியான தகவல்
அதே வேளையில் டெல்லி அணியில் விளையாடி வந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை 13.5 கோடிக்கு லக்னோ அணி ஏற்றுக் கொண்டுள்ளது. இப்படி மிகப்பெரிய டிரேடிங் இன்று அதிகாரப்பூர்வமாக ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றுள்ளதை பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



