நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ராஜ்கோட்டில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக கே.எல் ராகுல் சதமடித்து 112*, கேப்டன் கில் 56 ரன்கள் எடுத்த போதிலும் மற்றவர்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து 47.3 ஓவரிலேயே 286/3 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் சதமடித்து 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32* ரன்கள் எடுத்தனர்.
கிரிக்கெட்டின் தாயகம் இந்தியா:
இதன் வாயிலாக இந்திய மண்ணில் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து நியூசிலாந்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மிட்சேலுடன் சேர்ந்து 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 2017க்குப்பின் அதனுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் தோற்கடித்தது திருப்தியளிப்பதாக நியூசிலாந்து வீரர் வில் எங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரசிகர்களால் நிரம்பி வழியும் மைதானங்களைக் கொண்ட இந்தியா நவீன கிரிக்கெட்டின் தாயகம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றியில் மிகப்பெரிய திருப்தி. மிட்சேலுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததால் கிடைத்த இந்த வெற்றி இன்னும் திருப்தி கிடைக்கிறது. இந்தியா 2 சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருக்கிறது”
எங் பாராட்டு:
“முதலில் ஜடேஜாவுக்கு எதிராக நாங்கள் சவாலை சந்தித்து போக்கில் விளையாடினோம். எங்களுக்கு ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது இந்திய மண்ணில் நாங்கள் வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச இலக்கு என்ற ரெக்கார்ட் எனக்கு தெரியாது. 285 என்பது நல்ல நம்பர் என்று நாங்கள் நினைத்தோம். அதை வெற்றிகரமாக தொட்டுள்ளோம் என்றால் நாங்கள் அழுத்தத்தை சமாளித்து இந்தியாவை பல்வேறு தருணங்களில் அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளோம் என்று அர்த்தமாகும்”
இதையும் படிங்க: அந்த உலகின் சிறந்த பவுலரை அடித்து.. இந்தியாவை வீழ்த்த இதான் காரணம்.. ஆட்டநாயகன் மிட்சேல் பேட்டி
“அதற்காக நீங்கள் போட்டிகளில் வெவ்வேறு தருணங்களில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களுடைய பார்ட்னருடன் நேர்மையாக தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க வேண்டும். அதையே நாங்கள் செய்தோம். மீண்டும் ஃபார்முக்கு திரும்ப நான் கடினமாக உழைத்தேன். கிரிக்கெட்டில் உங்களால் எப்போதுமே ரன்கள் அடிக்க முடியாது. நாங்கள் இந்தியாவில் ஒரு போட்டியில் வெல்வதை விரும்பினோம். இந்தியாவில் விளையாடுவது எப்போதும் நன்றாக இருக்கும். இங்கு மைதானங்கள் எப்போதும் ரசிகர்களால் நிரப்பப்பட்டுள்ளது. எனவே கிரிக்கெட்டின் தாயகமான இந்தியாவில் விளையாடுவது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.



