இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா 2026 புத்தாண்டு வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.
வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்கள் அடித்து போராடி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை தவறவிட்டாலும் 93 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருது வென்றார்.
சோட்டா சீக்கு:
அத்துடன் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்திய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்தார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரை முந்தி வேகமாக 28000 சர்வதேச ரன்கள் அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்தார். முன்னதாக அப்போட்டி துவங்குவதற்கு முன்பாக விராட் கோலி வதோதரா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விராட் கோலியை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அவரைப் போலவே முக அமைப்பு கொண்ட குட்டி ரசிகர் காத்திருந்தார். இறுதியில் பயிற்சியை முடித்துக்கொண்டு பெவிலியன் சென்ற விராட் கோலியை அந்த ரசிகர் அழைத்துள்ளார். அதைக்கேட்டு திரும்பி பார்த்த விராட் கோலி தம்முடைய சிறு வயது தோற்றத்தை அப்படியே பிரதிபலித்த அந்த குட்டி ரசிகரை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.
சிறுவன் நெகிழ்ச்சி:
மேலும் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விராட் கோலி ஆட்டோகிராப் போட்டு பரிசு வழங்கினர். இந்நிலையில் அச்சந்திப்பின் போது “இங்கே பார் என்னுடைய டூப்ளிகேட் உட்கார்ந்திருக்கார்” என்று ரோஹித் சர்மாவிடம் விராட் கோலி சொன்னதாக அந்தச் சிறுவன் கூறியுள்ளார். மேலும் சீக்கு என்ற புனைப்பெயரைக் கொண்ட விராட் கோலி தம்மை “சோட்டா சீக்கு” என்று சொல்லி அழைத்ததாகவும் அந்த சிறுவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேணும்ன்னா பணம் தரேன்.. இந்தியாவை திணறடிக்க நியூசி எப்படி இதை செய்றாங்கன்னு தெரிஞ்சிக்கனும்.. அஸ்வின்
இது பற்றி அந்தச் சிறுவன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஸ்டைல் மற்றும் ஒளியை நான் விரும்புகிறேன். அவருடைய பெயரை நான் சொன்ன போது என்னை திரும்பி பார்த்த அவர் ஹாய் சொன்னார். விரைவில் உன்னைப் பார்க்க வருகிறேன் என்று அவர் என்னிடம் சொல்லி விட்டுச் சென்றார். பின்னர் அங்கே பார் என்னுடைய டூப்ளிகேட் உட்கார்ந்திருக்கிறார் என்று ரோஹித் சர்மாவிடம் சொன்ன அவர் என்னைச் சோட்டா சீக்கு என்றும் அழைத்தார். கே.எல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் ஆகியோரையும் நான் சந்தித்தேன்” என்று கூறினார்.



