இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா புத்தாண்டை வெற்றிகரமாகத் துவக்கியுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியா போராடி 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இருப்பினும் அப்போட்டியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை முக்கிய நேரத்தில் அவுட்டாக்கிய நியூசிலாந்து அணி இந்தியாவின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கியது. அப்போது அதிரடி காட்டிய ராணா 29 (23) ரன்கள் அடித்து திருப்பு முனையை உண்டாக்கினார். அதை வீணடிக்காமல் கேஎல் ராகுல் 29*, சுந்தர் 7* ரன்கள் அடித்ததால் இந்தியா போராடி 49வது ஓவரில் வென்றது.
நியூஸிலாந்துக்கு அஸ்வின் பாராட்டு:
இந்நிலையில் 2024இல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒய்ட்வாஸ் செய்த நியூசிலாந்து வதோதரா போட்டியிலும் அசத்தியதாக ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார். அப்படி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் திணறடிக்கும் அளவுக்கு நியூசிலாந்து எப்படி திட்டமிடுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பல முன்னணி அணிகள் பகுப்பாய்வு ரீதியாக இயங்குவதில்லை. ஆனால் நியூசிலாந்து மிகவும் பகுப்பாய்வு ரீதியாக இயங்கும். அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய திட்டமிடலை நான் விரும்புகிறேன். தேவைப்பட்டால் அதற்காக பணம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் எப்படி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய அணியில் ஒருவராக அமர்ந்து புரிந்து கொள்வதற்காக தேவைப்பட்டால் நான் பணம் செலுத்துவேன்”
வேணும்ன்னா பணம் தரேன்:
“முதல் போட்டியில் போராடும் துணிச்சலைக் காட்டிய நியூசிலாந்துக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இறுதிவரை போராடும் குணத்தை விடவில்லை. அதனாலேயே அவர்களால் கம்பேக் கொடுக்க முடிந்தது. நியூசிலாந்து அணியில் நாயகனுக்கு நாயகன் என்ற அடிப்படையில் அதிக பலம் இல்லை என்று நான் ஒரு ட்வீட் போட்டிருந்தேன். ஆனால் ஒழுக்கம், ஃபீல்டிங், திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களால் சிறந்த அணிகளுடன் போராடி போட்டியிட முடிகிறது”
இதையும் படிங்க: இந்தியாவை காப்பாற்ற வராத கேப்டன் கில்லுக்கு ஒரு நியாயம்.. சுந்தருக்கு வேற நியாயமா? ஃகைப் விளாசல்
“அதுவே நியூசிலாந்து அணியை மிகுந்த சுவாரசியமாக காட்சிப்படுத்துகிறது. இத்தனைக்கும் இந்தியா முதல் போட்டியில் தங்களது சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. முக்கிய நேரத்தில் ராணா சிறப்பாக பந்து வீசி, பேட்டிங் செய்ததால் இந்தியா வெற்றியைப் பாக்கெட்டில் போட்டது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



