இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்களை இலக்கை 49 ஓவரில் சேசிங் செய்த இந்தியா புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியது. அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காலில் காயத்தைச் சந்தித்தார்.
அதனால் பேட்டிங் செய்ய வர மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுந்தர் அதையும் தாண்டி களமிறங்கி 7* ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் ஓட முடியாமல் தடுமாறிய அவரால் மறுபுறம் விளையாடிய கேஎல் ராகுல் வேகமாக சிங்கிள்கள் எடுக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தார். இந்நிலையில் கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கழுத்து வலியைச் சந்தித்த கேப்டன் சுப்மன் கில் மேற்கொண்டு விளையாடவில்லை.
கில்லுக்கு ஒரு நியாயம்:
குறிப்பாக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை காப்பாற்றுவதற்காக கூட அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. அப்படிப்பட்ட நிலையில் வதோதரா போட்டியில் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான போது காயமடைந்த சுந்தரை வலுக்கட்டாயமாக பேட்டிங் செய்ய வைத்தது தவறான முடிவு என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். இது பற்றி சுப்மன் கில்லுக்கு ஒரு நியாயம் சுந்தருக்கு மற்றொரு நியாயமா? என்ற வகையில் அவர் விமர்சித்தது பின்வருமாறு.
“கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் காயத்தால் விளையாடாதது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போட்டியில் சுப்மன் கில் 20 – 30 ரன்கள் அடித்தால் கூட இந்தியாவின் வெற்றிக்கு உதவும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் அப்போதும் அவர் பேட்டிங் செய்ய வரவே இல்லை. அன்று காயம் மோசமாகி விடக்கூடாது என்பதற்காக அந்த வீரருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதே அணுகுமுறை சுந்தருக்கு பயன்படுத்தப்படவில்லை”
ஃகைப் விமர்சனம்:
“அதனாலேயே அது தவறான முடிவு என்று நான் கருதுகிறேன். அந்த முடிவால் கேஎல் ராகுல் ரன்கள் எடுக்க முயற்சித்தது பாதிக்கப்பட்டது. இறுதியில் இந்தியா வென்றாலும் சுந்தரின் காயம் மோசமாவதற்கான வாய்ப்பிருந்ததாக நான் கருதினேன். அது போன்ற சமயத்தில் நீங்கள் வேறொரு வீரரை முயற்சித்திருக்க வேண்டும். ஏனெனில் காயமடைந்த வீரர் தொடர்ந்து விளையாடினால் காயம் இன்னும் மோசமாகும்”
இதையும் படிங்க: விராட் கோலி திமிர் பிடித்தவர் மாதிரி தெரியலாம்.. ஆனா அவரோட அட்டிடியூட் வேற மாதிரி இருக்கும்.. ரஹானே பாராட்டு
“அவரால் டபுள் ரன்கள் எடுக்க முடியாமல் சிங்கிள் மட்டுமே எடுக்க முடியும். எனவே போட்டி கட்டுக்குள் இருந்தாலும் காயமடைந்த வீரரை அனுப்புவது ஆபத்தானதாக நான் கருதுகிறேன். அதனால் ஒரு வாரத்தில் குணமடைய வேண்டிய காயம் 20 – 30 நாட்கள் வரை தள்ளிப்போகலாம். அந்த தவறான முடிவை எடுத்ததற்கு பதில் நீங்கள் குல்தீப், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அனுப்பியிருக்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சுந்தரை அனுப்பியிருக்க வேண்டும்” என்று கூறினார்.



