இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை 49 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து சேசிங் செய்த இந்தியா 2026 புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது.
அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை தவற விட்டாலும் 93 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இலங்கை ஜாம்பவான் சங்ககாராவை முந்தி சச்சினுக்கு பின் 2வது அதிக சர்வதேச ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்தார். இந்நிலையில் 37 வயதிலும் அசத்துவதற்கு விராட் கோலியின் ஒழுக்கமான வேலை நெறிமுறைகளே காரணம் என்று அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார்.
திமிர்பிடித்தவர் இல்லை:
வெளியில் பார்ப்பவர்களுக்கு திமிர்த்தனத்தை போல் தெரியக்கூடிய மனப்பான்மையை விராட் கோலி பின்பற்றுவதாகவும் ரஹானே தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் போதாது. ஆனால் அவரையும் அவர் தன்னுடைய பேட்டிங்கில் எப்படி செல்கிறார் என்பதை நான் மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன்”
“நாம் அவருடைய ஆர்வம் மற்றும் நோக்கத்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசுகிறோம். ஆனால் என்னைப் பொறுத்த வரை அவருடைய மனப்பான்மை தான் தனித்து நிற்கக்கூடிய ஒன்றாகத் தெரிகிறது. அவருடைய மனப்பான்மை எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும், விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதாகும். அப்படிப்பட்ட விராட் கோலியை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் திமிர் பிடித்தவர் என்று நினைக்கிறார்கள்”
ரஹானே பாராட்டு:
“ஆனால் அவர் அப்படி அல்ல. அவர் தன்னுடைய மண்டலத்திற்குள் நுழைந்து விளையாடக் கூடியவர். அதற்காக போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக அவர் சக வீரர்களிடம் அதிகம் பேச மாட்டார். அப்படித்தான் அவர் தன்னுடைய மண்டலத்திற்குள் செல்கிறார். அதற்குள் இருப்பதற்காக அவர் தன்னுடைய காதுகளில் ஒலிக்கருவியை அணிந்துகொண்டு கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கிறார். அதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள கொஞ்சம் நேரம் எடுக்கும்”
இதையும் படிங்க: சுப்மன் கில்லின் அந்த தலைமைப் பண்பு எனக்கு பிடிச்சுருக்கு.. எல்லாருக்கும் சுதந்திரம் தராரு.. ராணா பேட்டி
“ஆரம்பத்தில் எனக்கு கூட அவருடைய செயல்பாடுகள் புரியவில்லை. ஆனால் பின்பு தான் அவர் தன்னுடைய மண்டலத்திற்குள் செல்ல விரும்புவதால் யாரிடமும் பேச விரும்புவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். விராட் கோலியின் அந்த மனப்பான்மை மற்றும் வேலை நெறிமுறைகள் அற்புதமானது. எப்போதும் மாற விரும்பும் அவர் தன்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் செய்து அணியின் வெற்றிகளில் பங்காற்ற விரும்புவார்” என்று கூறினார்.



