இந்திய கிரிக்கெட் அணி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை எம்.எஸ். தோனி தலைமையில் வென்றது. அதன் பின் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியை சந்தித்து வெறுங்கையுடன் வெளியேறியது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அந்த நிலையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அவரது தலைமையிலும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக செமி ஃபைனலில் தோல்வியுற்றது. அப்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை ரோஹித் சர்மா உருவாக்கினார். அந்த அணுகுமுறையில் விளையாடிய இந்தியா 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்றது.
எப்போதும் ரோஹித் கேப்டன்:
அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதற்காக அசராத இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடி தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது. அதே போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் ரோஹித் தலைமையில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா வென்றது.
அதன் வாயிலாக தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இருப்பினும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்ட தேர்வுக்குழு 2027 உலகக் கோப்பையில் அவரை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காக 2 ஐசிசி கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தற்சமயத்தில் கேப்டனாக இல்லாவிட்டாலும் தமக்கு எப்போதுமே கேப்டன் என்று ஜெய் ஷா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஜெய் ஷா நெகிழ்ச்சி:
இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா முன்னிலையில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய கேப்டன் இங்கே உட்கார்ந்திருக்கிறார். அவரை நான் கேப்டன் என்று மட்டுமே அழைப்பேன். ஏனெனில் அவர் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணியை தலைமைத் தாங்கினார். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி 10 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றது”
இதையும் படிங்க: கண்ணில் வெறி தெரியுது.. விராட் கோலி அந்த ஓய்வை ரத்து செஞ்சுட்டு விளையாட வரனும்.. உத்தப்பா கோரிக்கை
“இருப்பினும் எங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதயங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. 2024 பிப்ரவரி மாதம் ராஜ்கோட்டில் ரோஹித் சர்மாவை சந்தித்த போது, அடுத்த உலகக் கோப்பையை வெல்வோம் என்று நான் அவரிடம் சொன்னேன். அதே போலவே 2024இல் நாங்கள் இதயங்களையும் கோப்பையையும் வென்றோம்” என்று கூறினார். அதைக் கேட்டு ரோஹித் சர்மா புன்னகைத்தது குறிப்பிடத்தக்கது.



