77/5 டூ 175/7.. 5க்கு 5.. சறுக்கி எழுந்த இந்திய மகளிரணி இலங்கைக்கு எதிராக ஒய்ட்வாஷ் சாதனை வெற்றி

IND vs SL
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

அந்த நிலையில் கடைசிப் போட்டி டிசம்பர் 30ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற இலங்கை மகளிரணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் மந்தனாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தமிழக வீராங்கனை கமலினி அறிமுகமாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

- Advertisement -

சறுக்கி எழுந்த இந்தியா:

அந்த நிலையில் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஷபாலி வெர்மா 5 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் 2 பவுண்டரிகளை பறக்க விட்ட கமலினியும் 12 (12) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஹர்லின் தியோல் 13 ரன்னில் பெவலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரிச்சா போஸ் 5, தீப்தி சர்மா 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர்.

அதனால் 77/5 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்து வந்த அமன்ஜோத் கௌர் நிதானமாக விளையாடினார். அதைப் பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 68 (43) ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடி அமன்ஜோத் 21* (11) ரன்னில் அவுட்டானார். ஆனால் லோயர் ஆர்டரில் வந்த அருந்ததி ரெட்டி அதிரடியாக 27* (11) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

5க்கு 5 வெற்றி:

இறுதியில் ஸ்னே ராணா 8* (6) ரன்களை எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 175/7 ரன்கள் குவித்து அசத்தியது. இலங்கைக்கு அதிகபட்சமாக கவிசா திலாரி, ராஸ்மிகா, கேப்டன் சமாரி அத்தப்பட்டு தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய இலங்கை அணி கடுமையாக போராடியும் 20 ஓவரில் 160/7 ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ந்து 5வது முறையாக தோற்றது.

அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 65 (42), இமேஷா துலானி 50 (39) ரன்களை எடுத்தும் மற்ற வீராதனைகள் யாருமே 20 ரன்கள் கூட தாண்டவில்லை. அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 5 – 0 (5) என்ற கணக்கில் இத்தொடரை ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: 2 வருடங்கள் இடைவெளி.. மெக்கலமின் தனித்துவமான சாதனையை உடைத்த விராட் கோலி.. விவரம் இதோ

இதன் வாயிலாக மகளிர் டி20 கிரிக்கெட்டில் இலங்கையை 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட்வாஸ் செய்த முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 3 முறை விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை மகளிரணி இப்படி ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்ததில்லை. அதற்கு தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, ஸ்னே ராணா, வைஷ்ணவி சர்மா, ஸ்ரீ சரணி, அமன்ஜோத் கௌர் தலா 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

Advertisement