இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சீசன் 2025 நடைபெற்று வந்தது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனலில் வெற்றிகளைப் பெற்ற ஜார்கண்ட் மற்றும் ஹரியானா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் மாபெரும் இறுதிப்போட்டி டிசம்பர் 18ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புனேவில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஹரியானா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிசான் ஓப்பனிங்கில் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் விராட் சிங் அவுட்டானாலும் குமார் குஸக்ரா தமது பங்கிற்கு ஹரியானா பவுலர்களை வெளுத்து வாங்கினார்.
இஷான் கிசான் தலைமையில்:
ஒவ்வொருவருக்கும் 10 ரன்களுக்கும் மேல் குவித்து ஹரியானாவை பந்தாடிய அந்த ஜோடியில் இஷான் கிசான் சதமடித்து 6 பவுண்டரி 10 சிக்ஸருடன் 101 (49) ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக சயீத் முஸ்டாக் அலி கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் சதமத்த முதல் கேப்டன் என்ற சாதனையை இஷான் கிசான் படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய குஸக்ரா 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 (38) ரன்கள் குவித்து அவுட்டானார்.
கடைசி நேரத்தில் அங்குல் ராய் அதிரடியாக 40* (20), ராபின் மின்ஸ் 31* (14) ரன்களை விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் ஜார்க்கண்ட் 262/3 ரன்களை குவித்து மிரட்டியது. அடுத்ததாக விளையாடிய ஹரியானா அணிக்கு கேப்டன் அன்கிட் குமார், ஆசிஸ் சிவாச் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார்கள்.
வரலாற்று சாதனை வெற்றி:
மறுபுறம் தடுமாறிய அர்ஷ் ரங்கா 17 (15) ரன்களில் அவுட்டானதால் ஹரியானா 36/3 என சரிந்தது. மிடில் ஆர்டரில் யஸ்வர்தன் 53, நிஷாந்த் சிந்து 31, சமந் ஜாகர் 38 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் கைகொடுக்கவில்லை. இறுதியில் 18.3 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஹரியானா தோல்வியைத் தழுவியது. அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜார்கண்ட் முதல் முறையாக சயீத் முஸ்டாக் அலி கோப்பையை வென்று சாம்பியன் சாதனை படைத்தது.
இதையும் படிங்க: சச்சினுக்கு எம்.எஸ் தோனி செய்ததை.. விராட் கோலிக்காக இந்திய அணி 2027-ல் பண்ணனும் – அருண் துமால் கருத்து
கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் ஒருமுறை கூட ஜார்கண்ட் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஆனால் 18 வருடங்களில் காணாத வெற்றியை இம்முறை இஷாந்த் கிசான் தலைமையில் ஜார்க்கண்ட் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு பந்து வீச்சில் பாய் கிருஷ்ணா 3, சுஷாந்த் மிஸ்ரா 3, விகாஸ் சிங் 2, அங்குல் ராய் 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினர். இசான் கிசான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.



