இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் கிரேக் சேப்பல் மிகவும் சர்ச்சையான தலைமைப் பயிற்சியாளராக பார்க்கப்படுகிறார். அவருக்கும் அப்போதைய கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. அதனால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்படுவதற்கு சேப்பல் முக்கிய காரணமாக அமைந்தார்.
அதே போல இந்திய அணியில் அவர் செய்த குளறுபடியான மாற்றங்கள் 2007 உலகக் கோப்பையில் படுதோல்வியை பரிசாக கொடுத்தது. இந்நிலையில் கிரேக் சேப்பல் உண்மையிலேயே இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைக்கும் எண்ணத்துடன் செயல்பட்டதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். அதற்காக ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை இந்திய அணியில் கொண்டு வர முயற்சித்த கிரேக் சேப்பல் சிறப்பாக செயல்படாவிட்டால் அணியிலிருந்து நீக்குவேன் என்று வீரர்களை மிரட்டியதாகவும் பதான் கூறியுள்ளார்.
நல்ல சேப்பல்:
அந்த தவறான அணுகுமுறையை கையாளாமல் இருந்திருந்தால் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக வந்திருப்பார் என்றும் பதான் தெரிவித்துள்ளார். அவருடைய பயிற்சியில் விளையாடிய பதான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிரேக் சீனியர்கள் ஜூனியர்கள் ஆகியோரை ஒரே மாதிரியாக மதிக்கும் வழியைக் கொண்டிருந்தார். ஆனால் அதில் அவர் கொஞ்சம் ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றினார்”
“நீங்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அவர் அனைவரிடமும் சொன்னார். அது மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறை என்று நான் உணர்ந்தேன். அது பற்றி அவரிடம் ஒருமுறை நான் தனிப்பட்ட முறையிலும் பேசினேன். சிறப்பாக செயல்படாவிட்டால் அணியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதை நாங்களே அறிவோம், எனவே நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என சேப்பலிடம் சொன்னேன்”
தவறான அணுகுமுறை:
“அதற்காக நீண்ட நேரம் என்னை பார்த்த அவர் கோபமடைந்து சில மோசமான வார்த்தைகளை சொன்னார். ஆனால் நாளடைவில் நான் சொன்னதை அவர் சரி என்று புரிந்து கொண்டார். ஒருவேளை நான் வங்கதேசம் அல்லது இலங்கை அல்லது இங்கிலாந்துக்கு பயிற்சியாளராக சென்றால், அங்குள்ள கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எப்படி அங்குள்ள வீரர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள்? கிரேக் சேப்பல் நோக்கம் சரியானது. ஆனால் அவர் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை கொண்டு வர விரும்பினார். அவர் எங்களின் பின்னணிகளை அறியாமல் கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினார்”
இதையும் படிங்க: இந்திய ரூட்டை கையிலெடுத்த பாகிஸ்தான்.. ஆசிய கோப்பை அணி வெளியீடு.. பாபர், ரிஸ்வான் கேரியர் முடிகிறதா?
“நான் கவுன்டி தொடரில் மிடில்சக்ஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடினேன். அங்கே 4 நாள் விளையாடி முடித்துவிட்டு, அடுத்த நாள் பயணித்து, அதற்கடுத்த நாள் மதுக்கூடத்தில் சேர்வோம். நான் மது அருந்த மாட்டேன். ஆனால் நான் அவர்களுடைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்களும் அவர்களுடைய அணியில் அங்கமாக இருக்கிறீர்கள். எனவே சேப்பல் அதை தவற விடாமல் இருந்திருந்தால் சிறந்த பயிற்சியாளராக இருந்திருப்பார்” என்று கூறினார்.



