சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது இந்து தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
4 இந்திய வீரர்கள் சேர்ந்து நிகழ்த்திய சரித்திர சாதனை :
கடைசியாக மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியை நோக்கி நகர்ந்த வேளையில் இந்திய பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சின் போது கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் சதம் அடித்த இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இந்த தொடரின் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் எஞ்சியுள்ள ஐந்தாவது போட்டியானது வரும் ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலை அடையும் என்பதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி போட்டியானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன்கள் 4 பேர் இணைந்து மாபெரும் ஒரு வரலாற்று சாதனையை முதன் முறையாக நிகழ்த்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் கேப்டன் சுப்மன் கில் ஒரு இரட்டை சதம் உட்பட மொத்தமாக 4 சதங்களை விளாசி 722 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் இரண்டு சதங்களுடன் 511 ரன்கள் குவித்துள்ளார். ரிஷப் பண்ட் இரண்டு சதங்களுடன் 479 ரன்களை குவித்துள்ள வேளையில், ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 400 ரன்களுக்கு மேல் குளித்துள்ளார். இப்படி ஒரே டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் 4 வீரராகள் 400 ரன்களை கடப்பது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : அவங்க 2 பேருக்காக தான் நான் கம்முனு இருந்தேன்.. தன்னுடைய முடிவு குறித்து – சுப்மன் கில் விளக்கம்
அந்த வரலாற்று சாதனையை தற்போது இந்திய அணியின் வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது எவ்வாறு விளையாடப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருவதால் இந்திய அணியின் எதிர்காலமும் பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



