ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. முன்னதாக மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஓரளவு சிறப்பாக விளையாடிய அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறிய அவர் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு தடுமாறி வந்தார். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளில் முடிந்தளவுக்கு அசத்திய ஸ்ரேயாஸ் 2023 உலகக்கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் செல்ல உதவினர். அதைத் தொடர்ந்து கடந்த 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் காயத்தைச் சந்தித்து விரைவிலேயே குணமடைந்தார்.
ஒரே வருடத்தில் 5 பட்டங்கள்:
அப்போது அவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் 100% முழுமையாக குணமடையாத காரணத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் விதிமுறையை மீறியதாக கருதிய பிசிசிஐ அவரை மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது. அத்துடன் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் அவரை பிசிசிஐ கழற்றி விட்டது.
அதன் காரணமாக பெரிய பின்னடைவை சந்தித்த ஸ்ரேயாஸ் 2024 ரஞ்சிக் கோப்பையில் விளையாடி மும்பை அணிக்காக சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே வேகத்தில் 2024 – 25 சயீத் முஸடாக் அலி டி20 கோப்பையை கேப்டனாக அவர் மும்பை அணிக்கு வென்று கொடுத்தார். அதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதான் கம்பேக்:
அந்த வாய்ப்பில் கொல்கத்தாவை சிறப்பாக வழி நடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 10 வருடங்கள் கழித்து 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் 2024 இராணிக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை மும்பையுடன் சேர்ந்து வென்றார்.
இதற்கிடையே கொல்கத்தா அணி கழற்றி விட்ட ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி என்ற பெரியத் தொகைக்கு நம்பி வாங்கிய பஞ்சாப் கேப்டனாக அறிவித்தது. அடுத்ததாக துபாயில் நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அப்படி 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் மாதத்திற்குள் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி, சயீத் முஷ்டாக், இராணி, ஐபிஎல், சாம்பியனஸ் ட்ராபி என 5 சாம்பியன் பட்டங்களை ஒரே வருடத்திற்குள் வென்றார்.
இதையும் படிங்க: பிரியான்ஸ் ஆர்யா பற்றி கேவலமான வர்ணனை.. முரளி கார்த்திக்கை தடை செய்யுமாறு ரசிகர்கள் கொந்தளிப்பு
அதனால் பிசிசிஐ தாமாக முன்வந்து அவரை இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்த்தது. தற்போது 26.75 கோடி என்ற பெரியத் தொகைக்கு தம்மை நம்பி வாங்கிய பஞ்சாப்பை ஸ்ரேயாஸ் ஐயர் 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றள்ளார். அதே வேகத்தில் இறுதிப்போட்டியிலும் அவர் கோப்பையை வெல்வாரா என்பதை பார்ப்போம். அவரது போராட்டத்தை பார்க்கும் ரசிகர்களால் கம்பேக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பாராட்டாமல் இருக்க முடியாது.



