இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்தத் தொடரில் யார் தலைமையில் இந்தியா விளையாடப்போகிறது? வெற்றி பெறுமா? என்ற கேள்விகள் காணப்படுகின்றன.
முன்னதாக 2007 முதல் இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் இந்திய வீரர்கள் இப்திகார் பட்டோடி மற்றும் அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுதந்திரத்திற்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்காகவும் விளையாடி இரு நாடுகளின் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்காற்றியப் பெருமையைக் கொண்டவர்கள்.
சச்சின் – ஆண்டர்சன் பெயரில்:
எனவே அவர்களை கௌரவிக்கும் வகையில் 2007 முதல் தங்கள் நாட்டில் விளையாடும் இந்தியாவுக்கு எதிரானத் தொடர் பட்டோடி கோப்பை என்றழைக்கப்படும் என இங்கிலாந்து வாரியம் அறிவித்தது. இருப்பினும் தற்போது அந்தக் கோப்பைக்கு இங்கிலாந்து வாரியம் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடர்கள் பார்டர் – கவாஸ்கர் கோப்பை என்றழைக்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் – ஆலன் பார்டர் தங்களுடைய நாட்டுக்காக தலா 10000 ரன்கள் அடித்த முதல் வீரர்களாக சாதனை படைத்தனர். எனவே அவர்களுடைய பெயரை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடரின் கோப்பைக்கு சூட்டப்பட்டுள்ளது. அது மிகவும் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்து வருகிறது.
உருவாகும் புதிய கோப்பை:
அதே போல தற்போது இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் தொடருக்கு சச்சின் டெண்டுல்கர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயரை சூட்ட இங்கிலாந்து வாரியம் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டாப் 2 வீரர்களாக சச்சின் (200), ஆண்டர்சன் (188) சாதனைப் படைத்துள்ளனர். மேலும் உலக கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சச்சினும், அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக ஆண்டர்சனும் சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கில், பும்ரா வேணாம்.. கேஎல் ராகுலை கேப்டனாக போடுங்க.. 2022இல் கோலி செஞ்சதை மறக்காதீங்க.. சஞ்சய் பங்கர்
எனவே இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் தொடருக்கு அவர்களுடைய பெயரை சூட்டி புதிய சகாப்தத்தை படைக்க இங்கிலாந்து விரும்புவதாக தெரிய வருகிறது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய 2 வீரர்களின் பெயர்களை கோப்பைக்கு பெயரிட வேண்டும் என்பதில் பிசிசிஐக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் இது இங்கிலாந்து வாரியம் கொண்டு வரும் தனித்துவமான முடிவாகும்” என்று கூறினார்.



