இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக விளையாட வேண்டுமென பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும் அடிக்கடிக் காயத்தைச் சந்திப்பதால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை கேப்டனாக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன.
ஆனால் வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் எப்போதுமே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதில்லை. எனவே முதலில் அவர் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்ற வீரர் என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்கலாம் என்ற வித்தியாசமான ஆலோசனையை முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
கேப்டன் ராகுல்:
2021/22 தென்னாப்பிரிக்க தொடரில் விராட் கோலி காயமடைந்த போது ராகுல் 2வது போட்டியில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டதை மறக்காதீர்கள் என்றும் அவர் நினைவுப் படுத்தியுள்ளார். அந்த வகையில் ராகுலை கேப்டனாக பரிந்துரைப்பதற்கான காரணங்கள் பற்றி அவர் விவரித்தது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டி20 அணியின் புதிய கேப்டனாக செயல்படக் காத்திருந்தார். ஆனால் அவரிடம் ஃபிட்னஸ் பிரச்சனை இருப்பதால் சூரியகுமார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்”
“அதன் அடிப்படையில் பார்த்தால் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை தவற விடுவார். மறுபுறம் கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தம்முடைய தரத்தை நிரூபித்து டாப் ஆர்டரில் முக்கியமான ரன்கள் குவித்தவர். வெளிநாட்டு மண்ணில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடத் தகுதியானவர். அவர் தன்னுடைய பெரும்பாலான ரன்கள் மற்றும் சதங்களை வெளிநாட்டில் அடித்துள்ளார்”
2022 தொடரை மறக்காதீங்க:
“எனவே வெளிநாட்டில் அவரது திறமையில் எந்தக் கேள்வியும் இருக்காது. 31, 32 வயதாகும் அவர் கொஞ்சம் இளமையாகவும் இருக்கிறார். எனவே அவரால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை முழுமையாக விளையாட முடியும். சுப்மன் கில்லை நீண்ட கால கேப்டனாக இப்போது நியமித்தால் அது தவறாக அமையும். ஏனெனில் மிகவும் இளமையாக இருக்கும் அவருக்கு முன்னே நிறைய சுமையான கிரிக்கெட் இருக்கிறது”
இதையும் படிங்க: கவுதம் கம்பீரும் இல்ல.. வி.வி.எஸ் லக்ஷ்மணும் இல்ல.. இந்திய ஏ அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு – விவரம் இதோ
“வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக அசத்துவது அவருக்கு சவாலாக இருக்கும். அவரை நீண்ட கால கேப்டனாக நீங்கள் நியமிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக அவரிடம் உடனடியாக பொறுப்பைக் கொடுப்பது சரியானதாக இருக்காது. உங்களிடம் ராகுல் இருக்கிறார். ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் விராட் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பை விட்ட போது ராகுல் இந்தியாவை தலைமைத் தாங்கினார். அதில் நன்றாக செயல்பட்ட அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவார்” எனக் கூறினார்.



