ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் போட்டி அதிகரித்துள்ளது. சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிவிட்ட நிலையில் மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் செல்வதற்கு போராடி வருகின்றன. அதில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்விகளை சந்தித்துள்ளது.
அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு லக்னோ தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக லக்னோ தங்களது 10வது போட்டியில் மும்பையை எதிர்கொண்டு 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக ரிஷப் பண்ட் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது சர்ச்சையை உண்டாக்கியது.
மூளை இல்லையா:
இந்த வருடம் 27 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு வாங்கப்பட்ட அவர் பெரியளவில் ரன்கள் குவிக்கத் தடுமாறினார். அதனால் அந்தப் போட்டியில் 7வது இடத்தில் களமிறங்கிய அவர் கடைசி ஓவரில் 2 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார். அதற்கு முந்தைய ஓவரில் பவுண்டரி எல்லையில் “என்னை ஏன் தாமதமாக களமிறக்க வைத்தீர்கள்? இப்போது என்னவாயிற்று பாருங்கள்” என்ற வகையில் அவர் ஜகீர் கானுடன் காரசாரமாக விவாதித்தது வைரலானது.
இந்நிலையில் அந்த மோசமான முடிவை எடுத்த பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆலோசகர் ஜகீர் கான், கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு மூளை இல்லையா? என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஏனெனில் ரிஷப் பண்ட் லோயர் ஆர்டரில் விளையாடுவது பொருத்தமாக இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும் என்று தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் ஏன் வெறும் 2 பந்துகளை எதிர்கொள்ள வந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”
ஸ்ரீகாந்த் விமர்சனம்:
“லாங்கர் என்ன செய்ய முயற்சிக்கிறார்? அணி நிர்வாகம் என்ன முயற்சிக்கிறது? ஜஹீர் கான் எதை முயற்சிக்கிறார்? சிலர் ரிஷப் பண்ட் மேலே பேட்டிங் செய்ய விரும்பியதாகவும் அதற்கு லக்னோ நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் சொல்கின்றனர். ஆனால் கேப்டனான அவர் ஏன் மற்றவர்களிடம் சென்று அனுமதி கேட்க வேண்டும்?”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, ரித்திகாவை கையெடுத்து கும்பிட்ட ராஜஸ்தான் வீரர்.. ஹிட்மேன் நெகிழ்ச்சி பரிசு.. காரணம் என்ன?
“நாளின் இறுதியில் அது அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்கும். அனைவரும் அங்கே உட்கார்திருந்தனர். லாங்கரும் இருந்தார். அவருக்கு மூளை இல்லையா? ஆம் அங்கே 3 பேர் இருந்தார்கள். அந்த மூவருக்குமே மூளை இல்லையா?” என்று கூறினார். இதைத் தொடர்ந்து லக்னோ தங்களது அடுத்த போட்டியில் மே நான்காம் தேதி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.



