ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது. மே ஒன்றாம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐம்பதாவது போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதையும் சேர்த்து 11 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்ற மும்பை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
அத்துடன் கடைசி 6 போட்டிகளில் மும்பை தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் இந்த வருடம் மும்பை 6வது கோப்பையை வெல்லும் என்று அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள். முன்னதாக அந்தப் போட்டியின் முடிவில் மும்பை அணியின் நட்சத்திரம் ரோகித் சர்மாவை ராஜஸ்தான் வீரர் ஆகாஷ் மாத்வால் நேரில் சந்தித்தார்.
அணி மாறினாலும்:
அப்போது ரோஹித் சர்மாவை தன்னுடைய 2 கைகளாலும் கும்பிட்ட ஆகாஷ் மாத்வால் மரியாதை செய்தார். அதற்கான காரணம் என்னவெனில் 2023ஆம் ஆண்டு மும்பை அணிக்காக வாங்கப்பட்ட அவருக்கு அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மிரட்டிய ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகள் எடுத்து மும்பையை வெற்றி பெற வைத்தார்.
அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆனால் அதன் பின் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்த மும்பை நிர்வாகம் அவரை தக்கவிக்கவில்லை. அதனால் அவரை ராஜஸ்தான் அணி 1.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
நன்றி மறவாத ஆகாஷ்:
அந்த அணியில் அவருக்கு இதுவரை வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் ஐபிஎல் தொடரில் தமக்கு முதல் முறையாக வாய்ப்பு கொடுத்த முன்னாள் கேப்டனை மறவாத ஆகாஷ் கையெடுத்து கும்பிட்டு ரோஹித் சர்மாவுக்கு மரியாதை செய்தார். அப்போது அவரிடம் மைதானத்தின் மேல் பகுதியில் இருந்த தம்முடைய மனைவி ரித்திகாவை ரோகித் காண்பித்தார்.
இதையும் படிங்க: ஆஸியை பயமுறுத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச்சின் ப்ராட்மேன்.. நானே அதை பக்கத்துல பாத்தேன்.. ஆடம் கில்கிறிஸ்ட்
உடனே ரித்திகாவுக்கும் அவர் கையெடுத்து கும்பிட்டு மரியாதை செய்தார். இறுதியில் தம்முடைய ஜெர்சியில் முதுகில் இருக்கும் பெயருக்குக் கீழே ஃஆட்டோகிராப் போடுமாறு ஆகாஷ் கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கையை ஏற்ற ரோஹித் சர்மா ஃஆட்டோகிராப் போட்டு கொடுத்து ஆகாஷ் மாத்வாலுக்கு நெகிழ்ச்சியான பரிசைக் கொடுத்தார்.



