ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு முள்ளான்பூரில் 37வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பஞ்சாப்புக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா 22, பிரப்சிம்ரன் சிங் 32 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.
ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6, நேஹல் வதேரா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக 29 (17) ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 ரன்னில் அவுட்டானார். சசாங் சிங் 31* (32), மார்கோ யான்சென் 25* (20) ரன்கள் மட்டுமே எடுத்து நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறினர்.
பெங்களூரு வெற்றி:
அதனால் பஞ்சாப் 20 ஓவரில் 157-6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெங்களூருவுக்கு அதிகபட்சமாக சூயஸ் சர்மா 2, க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார் விக்கெட்டை எடுக்காவிட்டாலும் டெத் ஓவர்களில் அபாரமாக பௌலிங் செய்து பஞ்சாப்பை கட்டுப்படுத்தினர். அடுத்து விளையாடிய பெங்களூருவுக்கு பில் சால்ட் 1 ரன்னில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார்.
இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்த தேவ்தூத் படிக்கல் அதிரடியாக விளையாடி அசத்தினார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து அரை சதத்தை அடித்தது.
கோலி சாதனை:
அதில் படிக்கல் 61 (35) ரன்கள் அடித்த போது ஹர்ப்ரீத் ப்ரார் சுழலில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ரஜத் படிதார் 12 ரன்னில் சஹால் சுழலில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 73* ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். இறுதியில் ஜித்தேஷ் சர்மா 11* (8) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரில் 159-3 ரன்களை எடுத்த பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய 5வது வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க: சேப்பாக்கம் மட்டுமில்ல.. வான்கடேவில் தோனி விளையாடும்போது இதுதான் நடக்கும் – மனம்திறந்த ஹார்டிக் பாண்டியா
இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் விராட் கோலி 59 அரை சதம், 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 67*
2. டேவிட் வார்னர்: 66
3. ஷிகர் தவான்: 53
4. ரோஹித் சர்மா: 45
5. கேஎல் ராகுல்: 43



