பிபிஎல் ஃபைனல்: 108 ரன்ஸ்.. 14 வருட தவத்தை ரசிகனாக வந்து நிறைவேற்றிய வீரர்.. உலக சாதனை

Mitchell Owen
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2024 – 25 பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. அந்தப் போட்டி ஜனவரி 27ஆம் தேதி ஹோபார்ட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஹோபார்ட் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சிட்னி 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 182-7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 48, ஜேசன் சங்கா 67 ரன்கள் எடுத்தார்கள். ஹோபார்ட் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நாதன் எலிஸ் 3, ரிலே மெரிடித் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 183 ரன்களை துரத்திய ஹோபார்ட் அணிக்கு துவக்க வீரர் மிட்சேல் ஓவன் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

ரசிகன் டூ ஆட்டநாயகன்:

ஆனால் எதிர்ப்புறம் கேளப் ஜூவெல் 13, நிகில் சவுத்ரி 1 ரன்களில் சங்கா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் இந்தப் பக்கம் அவர்களுக்கும் சேர்த்து அடித்து நொறுக்கிய ஓவன் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல பட்டாசாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை அடித்து 108 (42) ரன்களை 257.14 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.

அவரது அதிரடியை வீணடிக்காமல் அடுத்து வந்த பென் மெக்டெர்மோட் 18* (12), மேத்தியூ வேட் 32* (17) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 14.1 ஓவரில் 185-3 ரன்கள் எடுத்த ஹோபார்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2024 – 25 பிக்பேஷ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதனால் பிபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஹோபார்ட் அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

14 வருட காத்திருப்பு:

குறிப்பாக 2015 பிபிஎல் தொடரில் ஒரு லீக் போட்டியில் இதே மிட்சேல் ஓவன் ரசிகனாக ஹோபார்ட் அணிக்கு மைதானத்திலிருந்து ஆதரவு கொடுத்தார். இன்று 10 வருடங்கள் கழித்து 23 வயதாகும் அவர் ஃபைனலில் சதத்தை அடித்து தம்முடைய அணிக்கு முதல் முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வகையில் ரசிகனாக வந்து அவர் தன்னுடைய அணியின் கனவை நிஜமாக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 16 யார்ட், சிமெண்ட் ஸ்லாப்.. ஃபார்முக்கு திரும்ப சஞ்சய் பங்கருடன் 3 ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த கோலி

அவருடைய ஆட்டத்தால் 14 வருடங்களாக தவமாக காத்திருந்த ஹோபார்ட் பிபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. மேலும் 39 பந்துகளில் சதத்தை அடித்த அவர் ஒரு டி20 தொடரின் ஃபைனலில் வேகமாக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2024இல் ஹாங்காங்கிற்கு எதிராக ரவிஜா சந்துருவன் 47 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனை. இந்த நிகழ்வு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது.

Advertisement