தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் ஜூலை 21ஆம் தேதி 20வது லீக் போட்டி நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்கள் அமித் சாத்விக் மற்றும் துசார் ரஹீஜா ஆகியோர் ஆரம்பத்திலேயே ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் சாத்விக் நிதானமாக விளையாடிய நிலையில் ரஹிஜா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 11 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தை கொடுத்தது.
வெளியேறிய சேலம்:
அதில் நிதானமாக விளையாடிய சாத்விக் அரை சதமடித்து 50 (39) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடி காட்டிய ரகீஜா 7 பவுண்டரி 4 சிக்சருடன் 79 (49) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவர்களைத் தொடர்ந்து அனிருத் 17, கேப்டன் சாய் கிஷோர் 12, முகமத் அலி 9, கணேஷ் 3 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 20 ஓவரில் திருப்பூர் 192/9 ரன்கள் எடுத்தது. சேலம் சார்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி, குரு சாயி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 193 ரன்களை துரத்திய சேலத்துக்கு முதல் ஓவரிலேயே அபிஷேக்கை ஒரு ரன்னில் புவனேஸ்வரன் காலி செய்தார். அதற்கடுத்த ஓவரில் நடராஜன் மற்றொரு துவக்க வீரர் முகமது கானை டக் அவுட்டாக்கினார். அடுத்து வந்த ராபின் பிஸ்த் 3, ராஜேந்திரன் விவேக் 1 ரன்களில் முகமது அலி வேகத்தில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு கேப்டன் சஜித் சந்திரன் 1 ரன்னில் அவுட்டானதால் 22/5 என சேலம் ஆரம்பத்திலேயே சரிந்தது.
அப்போது விஷால் வைதியா முடிந்தளவுக்கு போராடி 35 ரன்கள் குவித்து அவுட்டானார். அதே போல லோயர் மிடில் ஆர்டரில் ரஞ்சன் அதிரடியாக அரை சதமடித்து 53* (29) ரன்களும் ஹரிஷ் குமார் 32 (21) ரன்களும் எடுத்துப் போராடினர். ஆனாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவரில் சேலம் 141/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
அதனால் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக முகமத் அலி 3, நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறிய நம்பிக்கை நட்சத்திரம் நடராஜன் 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுத்தார்.
இதையும் படிங்க: அவங்க 3 பேரிடமும் இன்னும் நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – பாக் கேப்டன் பாபர் அசாம் கருத்து
இதையும் சேர்த்து 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த சேலம் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் சேலத்தை வீட்டுக்கு அனுப்பி நாக் அவுட் செய்த திருப்பூர் 5 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து 6வது இடத்திற்கு முன்னேறியது.



