இப்போவும் சொல்றேன் உலகக்கோப்பையில் நிச்சயம் அது நடக்கும் – ரோஹித் சர்மா நம்பிக்கை

Rohith
- Advertisement -

வரலாற்றில் 15ஆவது முறையாக ஐக்கிய நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் எளிதாக வென்று கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கருதப்பட்ட இந்தியா தற்போது பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. இத்தனைக்கும் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் வென்று பாகிஸ்தான், இலங்கை போன்ற எதிரணிகளை காட்டிலும் வலுவான அணியாக இந்தியா திகழ்கிறது.

IND vs SL

- Advertisement -

போதாக்குறைக்கு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் திகழும் இந்தியா இதர ஆசிய அணிகள் காட்டிலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற உலகத்தரம் வாய்ந்த சூப்பர் ஸ்டார் வீரர்களைக் கொண்டுள்ளது. பொதுவாகவே சமீப காலங்களில் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போடும் இந்தியா ஐசிசி உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் மண்ணை கவ்வி வெளியேறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் வென்ற இந்தியா 6 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பையில் மீண்டும் அதே வேலையை காட்டி வழக்கம்போல முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்வியடைந்துள்ளது.

டீம் ரெடி, கப் நமதே:
விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு வெள்ளோட்டமாக நடைபெற்ற இந்த தொடரில் தீபக் சஹர் இல்லாமல் வெறும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்த தவறான அணி தேர்வு, தேர்வு செய்யப்பட்ட அணியிலும் நியாயமின்றி தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டது, ராகுல் – புவனேஸ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், தீபக் ஹூடாவை சரியாக பயன்படுத்தாதது என அத்தனை குளறுபடிகளையும் செய்த இந்தியா தங்களை விட அனுபவமில்லாத இலங்கையிடம் தோற்றது. இதனால் இந்த ஆசிய கோப்பையே தக்க வைக்க முடியாத இந்தியா எங்கே டி20 உலகக் கோப்பையை வெல்லப் போகிறது என்று நிறைய இந்திய ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

IND

ஆனால் இந்த தோல்வியை வைத்து தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கும் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வது உறுதி என்றும் அதற்காக 95% அணி தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி இலங்கையிடம் தோற்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் எந்த இடத்திலும் தடுமாறுவதாக எனக்கு தோன்றவில்லை. நமது அணியில் தரம் எப்போதும் உள்ளது. இருப்பினும் பல தரப்பு தொடர்களில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும். அதே சமயம் இருதரப்பு தொடர்களில் நீங்கள் ஒரு அணிக்கு எதிராக 4 – 5 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால் எதிரணியின் எண்ணங்களை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடுகிறோம். எனவே இதில் எவ்வாறு முன்னோக்கி நடப்பது என்பதைப் பற்றி அணியில் நாங்கள் விவாதித்துள்ளோம்”

“துரதிஸ்டவசமாக கடந்த டி20 உலக கோப்பையில் நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. தற்போது ஆசிய கோப்பையில் 2 போட்டியில் தோற்றுள்ளோம். இருப்பினும் இவை அனைத்தும் எங்களுக்கு சவாலாகும். ஆனால் வரலாற்றில் உலக கோப்பையில் எங்களது செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால் நாங்கள் நிறைய அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடி கோப்பையையும் வென்றுள்ளோம். எனவே இந்த 2 போட்டிகளில் தோற்றதற்காக நாங்கள் கவலைப்பட தேவையில்லை”

- Advertisement -

“இது போன்ற பேச்சுக்களை எங்களது அணியில் பேசவும் மாட்டோம். கடந்த உலகக் கோப்பைக்கு பின் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளை கண்டுள்ளோம். எனவே ஆசிய கோப்பையில் 2 போட்டிகளில் தோற்றதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எங்களது அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் உள்ளனர். இதுபோன்ற தோல்விகள் நிகழ்வது சாதாரணமாகும்”

Rohith

“எங்களது அணி 95% செட்டிலாகி விட்டது. உலக கோப்பைக்கு முன்பாக ஒரு சில மாற்றங்கள் மட்டுமே நிகழ உள்ளது. அதற்கு முன்பாக இது போன்ற சில சோதனைகளை நாங்கள் முயற்சித்து பார்க்கிறோம். இந்த ஆசிய கோப்பைக்கு முன்பாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 சுழல் பந்துவீச்சாளர்கள் அதில் 2வது சுழல்பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டராக நாங்கள் விளையாடினோம். ஆனால் இறுதிக்கட்ட அணிக்கு முன்பாக நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களை முயற்சித்துப் பார்த்தோம்”

இதையும் படிங்க : தீபக் ஹூடாவுக்கு ஏன் பவுலிங் சான்ஸ் கொடுக்கல – ரசிகர்களின் கேள்விக்கு ரோஹித்தின் மலுப்பலான பதில் இதோ

“எனவே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் நான் உலக கோப்பையில் (வென்று) பதிலளிக்கிறேன். இந்த ஆசிய கோப்பைக்கு பின் இன்னும் எங்களுக்கு 2 தொடர்கள் உள்ளது. அதன்பின் உலகக் கோப்பை அணி எப்போது வெளியாகும் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதுவரை நாங்கள் இதுபோன்ற சோதனையில் ஈடுபட உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement