இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 393/8 ரன்கள் குவித்த போது ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்ததால் எக்ஸ்ட்ராவாக 40 – 50 ரன்களை எடுக்கும் வாய்ப்பை தைரியமாக டிக்ளர் செய்கிறோம் என்ற பெயரில் நழுவ விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பொதுவாக தேவைக்கு அதிகமான ரன்களை குவித்தால் மட்டுமே முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்யும் முடிவை எடுப்பது வழக்கமாகும். ஆனால் சில சமயங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் கேப்டன் எதிரணியின் திறமையை குறைத்து மதிப்பிட்டு ஸ்டைலாக வெற்றி பெறலாம் என்று நினைத்து இப்படி டிக்ளர் செய்வார்கள். இருப்பினும் கணிக்க முடியாத கிரிக்கெட்டில் அந்த முடிவால் வருந்தும் அளவுக்கு வரலாற்றில் சில அணிகள் அபாரமாக செயல்பட்டு வெற்றியால் பதிலடி கொடுத்த தருணங்களை பற்றி பார்ப்போம்.
1. ஜாம்பவானின் தப்பு கணக்கு: 1968ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ரோஹன் கன்காய் 153 மற்றும் செய்மர் நர்ஸ் 136 ரன்கள் குவித்த உதவியுடன் 567/7 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு கேப்டன் கோலின் கௌட்ரே 147 ரன்கள் எடுத்த போதிலும் 404 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதனால் 122 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வெறும் 92/2 ரன்கள் எடுத்து தங்களுடைய 2வது இன்னிசை டிக்ளர் செய்வதாக ஜாம்பவான் கேப்டன் கேரி சோபர்ஸ் அறிவித்தார். குறிப்பாக இங்கிலாந்தின் முதுகெலும்பான ஜெஃப்ரி பாய்காட் முதல் இன்னிங்ஸில் ரொம்பவே மெதுவாக விளையாடியதால் எளிதாக வென்று விடலாம் என்று நினைத்து அவர் தப்பு கணக்கு போட்டு 53 ஓவரில் 215 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார். அந்த காலத்தில் அந்த ரன்களை இங்கிலாந்து எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2வது இன்னிங்ஸில் திடீரென பாய்காட் 80 ரன்களும் கேப்டன் கௌட்ரே 71 ரன்களும் எடுத்து சற்று அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தனர்.
2. ஸ்மித்தின் தவறு: 2006இல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜேக் காலிஸ் 111, அஸ்வெல் பிரின்ஸ் 119 ஆகியோரது சதங்களால் 451/9 ரன்களில் தென்னாபிரிக்கா டிக்ளர் செய்வதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவித்தார். அதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங் 120 ரன்கள் எடுத்த உதவியுடன் 359 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனால் 90 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 194/5 ரன்களை வேகமாக எடுத்தது. ஆனால் 4வது நாளில் மழை வந்த நிலையில் 5வது நாளில் 60 ஓவரில் 288 ரன்களை எடுங்கள் என ஸ்மித் தைரியமாக டிக்ளேர் செய்தார். குறிப்பாக மழை பெய்ததால் தங்களுடைய தரமான பவுலிங் எதிராக ஆஸ்திரேலியா வெல்லாது என்று அவர் கருதினார். ஆனால் கடைசி நாளில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியாவுக்கு ஹெய்டன் 90 ரன்களும் ரிக்கி பாண்டிங் மீண்டும் சதமடித்து 143* ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
3. சென்னை மேஜிக்: 2008ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் எடுத்த உதவியுடன் 316 ரன்கள் குவிக்க அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 241 ரன்களுக்கு சுருண்டது. அதனால் தப்பு கணக்கு போட்ட கேப்டன் கெவின் பீட்டர்சன் மீண்டும் ஸ்ட்ராஸ் 108, காலிங்வுட் 108 ரன்கள் எடுத்த உதவியுடன் 311/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்து 387 என்ற கடினமான இலக்காக இந்தியாவுக்கு கொடுத்தார்.
4வது நாள் மாலையில் அதை துரத்த துவங்கிய இந்தியாவுக்கு சேவாக் அதிரடியாக 83 (66) ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்த நிலையில் கடைசி நாளில் 257 ரன்கள் தேவைப்பட்ட போது ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர் ஏமாற்றினர். இருப்பினும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 103* ரன்களும் யுவராஜ் சிங் 85* ரன்களும் எடுத்து இந்தியா அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து பதிவு செய்த மேஜிக் வெற்றியை பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது.
4. ஹைதெராபாத் மிரட்டல்: 2013இல் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மைக்கேல் கிளாக் 91 ரன்கள் எடுத்து 237/9 ரன்களில் இருந்த போது இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய இந்தியாவுக்கு புஜாரா 204 ரன்கள் விளாசி 503 ரன்கள் எடுக்க உதவினார்.
இதையும் படிங்க:IND vs WI : இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறப்பட்ட வீரருக்கு மீண்டும் கிடைத்த இடம் – விவரம் இதோ
அதை விட 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 5, ஜடேஜா 3 விக்கெட்கள் எடுத்த மாயாஜால சுழலில் ஆஸ்திரேலியா 131 ரன்களுக்கு சுருண்டது. அதனால் இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியாவுக்கு எதிராக முதலில் இன்னிங்ஸை டிக்ளர் செய்திருக்கக் கூடாது என மைக்கேல் கிளார்க் போட்டியின் முடிவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.