ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்காக தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் ஆசிய கண்டத்தின் தகுதி சுற்று தொடர் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மங்கோலியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 14.2 ஓவரில் 17 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக ஹாங்காங் அணிக்கு அதிகபட்சமாக ஈசான் கான் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
4 ஓவர்களும் மெய்டன்:
அதை விட வேகப்பந்து வீச்சாளரான ஆயுஷ் சுக்லா மிகவும் துல்லியமாகவும் அபாரமாகவும் பந்து வீசி மங்கோலியாவை தெறிக்க விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் ஆரம்ப முதலே துல்லியமாக பந்து வீசிய அவர் 4 ஓவரில் தொடர்ச்சியாக 4 மெய்டன் ஓவர்களை வீசி 1 ரன் கூட கொடுக்காமல் 1 விக்கெட் எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் தொடர்ந்து 4 ஓவர்களையும் மெய்டனாக வீசிய வீரர் என்ற உலக சாதனையை ஆயுஷ் சுக்லா சமன் செய்தார்.
இதற்கு முன் உலக அளவில் கனடா வீரர் சாத் பின் ஜாபர் கடந்த 2021ஆம் ஆண்டு பனாமா அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள் எடுத்து 4 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரராக சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 4 மெய்டன் ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்தார்.
1.4 ஓவரில் முடிந்த போட்டி:
தற்போது அவர்கள் படைத்த உலக சாதனையை ஆயுஷ் சுக்லா சமன் செய்துள்ளார் . அத்துடன் ஆசிய கண்டத்திலிருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 21 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயுஷ் சுக்லா இதுவரை 35 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 97 ரன்ஸ்.. 139 சிக்ஸ்.. சரவெடியாக ஆடிய நிக்கோலஸ் பூரான்.. கிறிஸ் கெய்லை முந்தி புதிய உலக சாதனை
குறிப்பாக கடந்த 2022 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அவர் 4 ஓவரில் 29 ரன்கள் கொடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இறுதியில் 18 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு ஜீசன் அலி 15* (6) ஜேம்ஸ் அட்கின்சன் 2, நிஷாகத் கான் 1* ரன்கள் எடுத்தனர். அதனால் 1.4 ஓவரிலேயே 18-1 ரன்கள் எடுத்த ஹாங்காங் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.