இம்முறை விளையாடாத கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெற்றியின் 5 இந்திய ஹீரோக்கள்

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை இம்முறை இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 1996/97 முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் இதுவரை 15 தொடர்கள் நடைபெற்றுள்ளது. அதில் 10 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை அடக்கி ஆளும் வலுவான அணியாகவே ஜொலித்து வருகிறது. இந்த 10 வெற்றிகளில் உங்களுக்கு பிடித்தது எது என்று இந்திய ரசிகர்களிடம் கேட்டால் 2001இல் கங்குலி தலைமையில் ஆரம்பத்தில் வீழ்ந்தாலும் லக்ஷ்மன் – ட்ராவிட் ஆகியோரின் அபார பார்ட்னர்ஷிப் மற்றும் ஹர்பஜன் சிங் மாயாஜால ஹாட்ரிக் பந்து வீச்சில் 2 – 1 (3) என்ற கணக்கில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததை சில ரசிகர்கள் கூறுவார்கள்.

மேலும் 2018/19இல் புஜாரா, பும்ரா போன்றவர்களின் அற்புதமான ஆட்டத்தால் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பை வென்றதை பெரும்பாலான ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால் கடைசியாக 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோப்பையை வென்றதே தங்களுக்கு மிகவும் பிடித்தது என்று 99.99% இந்திய ரசிகர்கள் கூறுவார்கள்.

- Advertisement -

காபா ஹீரோக்கள்:
ஏனெனில் முதல் போட்டியிலே 36க்கு ஆல் அவுட்டாகி சரித்திர தோல்வியை சந்தித்த இந்தியாவின் கதை முடிந்ததாக கருதப்பட்ட போது மெல்போர்னில் அஜிங்கிய ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியாவை சிட்னியில் தோற்க வேண்டிய போட்டியில் அஷ்வின் – விஹாரி போன்றவர்கள் உடம்பில் அடிகளை வாங்கிக்கொண்டு டிரா செய்து காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கடைசி போட்டியில் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் சொல்லி அடித்த இந்தியா காபா கோட்டையை தகர்த்து மூவர்ண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணத்தில் மீண்டும் வெற்றி கண்டது.

அந்த வெற்றி இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான கம்பேக் வெற்றியாக அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சில வீரர்கள் இம்முறை நடைபெறும் தொடரில் விளையாடாததை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அஜிங்க்ய ரகானே: 36க்கு ஆல் அவுட்டான பின் குழந்தை பிறப்புக்காக விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் 2வது போட்டியில் சதமடித்து எஞ்சிய போட்டிகளில் அபாரமாக வழி நடத்திய இவரை வெற்றிக்குப் பின் இரும்பு மனம் கொண்ட கேப்டன் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் பாராட்டின.

அந்தளவுக்கு சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய அவர் இம்முறை சுமாரான பார்ம் காரணமாக விளையாடவில்லை.

- Advertisement -

2. ரிஷப் பண்ட்: கடந்த தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டாலும் 2வது போட்டியில் வாய்ப்பு பெற்று அசத்திய இவர் 3வது போட்டியில் அதிரடியாக விளையாடி கிட்டத்தட்ட இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார்.

இருப்பினும் காபாவில் 89* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்த அவர் மொத்தம் 274 ரன்களை 68.50 என்ற சிறப்பான சராசரியில் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் துரதிஷ்டவசமாக கார் விபத்துக்குள்ளான அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்து வருவதால் இம்முறை பங்கேற்கவில்லை.

- Advertisement -

3. வாஷிங்டன் சுந்தர்: வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் காயமடைந்த அஸ்வினுக்கு பதில் வாய்ப்பு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற மற்றொரு தமிழக ரத்தமான இவர் முதல் இன்னிங்சில் 62 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளுடன் முக்கியமான 22 (29) ரன்களும் எடுத்து வெற்றியின் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக மிச்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் அசால்டாக அவர் பறக்க விட்ட சிக்சர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இருப்பினும் தற்போது அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் விளையாடுவதால் இவருக்கு நெட் பவுலராக மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

4. ஷார்துல் தாகூர்: அதே போட்டியில் அறிமுகமாக களமிறங்கி முதல் இன்னிங்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த இவர் வாஷிங்டன் சுந்தருடன் 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்கள் விளாசினர்.

அத்தோடு நிற்காமல் 2வது இன்னிங்ஸில் முக்கியமான 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் வெற்றிக்குப் பின் மூவர்ண கொடியை கையில் பிடித்துக் கொண்டாடினார். இருப்பினும் சுழலுக்கு சாதகமான இத்தொடரில் ஷமி, சிராஜ் விளையாடுவதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

5. நடராஜன்: பும்ரா, ஷமி ஆகியோர் காயமடைந்ததால் அதே காபா போட்டியில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த இவர் தமிழக ரசிகர்கள் பெருமைப்படும் அளவுக்கு முதல் இன்னிங்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க:IND vs AUS : ரசிகர்களின் கிண்டலால் வேறு வழியின்றி முரளி விஜயை சரணடைந்த சஞ்சய் மஞ்ரேக்கர் – நடந்தது என்ன

அந்த வகையில் காபா வெற்றியின் பல ஹீரோக்களில் ஒருவரான இவரும் அதைத் தொடர்ந்து சந்தித்த காயத்தால் சமீப காலங்களில் எந்த போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாடவில்லை. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காதது தமிழக ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement