IND vs AUS : ரசிகர்களின் கிண்டலால் வேறு வழியின்றி முரளி விஜயை சரணடைந்த சஞ்சய் மஞ்ரேக்கர் – நடந்தது என்ன

Sanjay Manjrekar Murali Vijay
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை நாக்பூரில் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவின் தரமான பந்து வீச்சிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஷ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடவலாக செயல்பட்ட ராகுல் 20 ரன்களில் அவுட்டான போது அடுத்து வந்த அஷ்வின் 23, விராட் கோலி 12, புஜாரா 7, சூரியகுமார் யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்சருடன் 120 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருக்கு பின் 8வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தி வரும் ஜடேஜா 66* ரன்களும் அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 321/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.

- Advertisement -

சரணடைந்த மஞ்ரேக்கர்:
முன்னதாக இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ரோகித் சர்மா சதமடிப்பாரா என்பதை பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் தலைமையிலான வர்ணனையாளர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விவாதித்தனர். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் தாங்கள் அடித்த அரை சதங்களை அதிக முறை சதங்களாக மாற்றிய வீரர்களின் பட்டியல் ஒளிபரப்பப்பட்டது. அதில் 2010 – 2015 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய தமிழக வீரர் முரளி விஜய் 60 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால் அதைப் பார்த்த சஞ்சய் மஞ்ரேக்கர் முரளி விஜய் போன்ற ஒரு பெரிய அளவில் சாதிக்காத வீரர் இப்படி முதலிடத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக நேரலையில் மட்டமாக பேசினார். அதை அறிந்த முரளி விஜய் முதலில் “வாவ்” என்று அவரை டேக் செய்து ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். அதை பார்த்த ரசிகர்கள் எப்போதுமே மும்பையை சேர்ந்தவர்களை உயர்த்தியும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்களை மட்டம் தட்டி பேசுவதும் வழக்கம் தானே என்று சஞ்சய் மஞ்ரேக்கரை கிண்டலடித்தனர். அத்துடன் சில முன்னாள் மும்பை வீரர்கள் எப்போதும் தென்னிந்தியர்களின் சாதனைகளை பாராட்டுவதில்லை என்று மீண்டும் முரளி விஜய் ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதற்கு வெறும் 4 டெஸ்ட் சதங்களை அடித்த அவரை விட 12 சதங்கள் அடித்த உங்களது திறமையை நாங்கள் அறிவோம் என்பதால் தேவையின்றி அவரைப் போன்றவர்களுக்கு கவனத்தை கொடுத்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று முரளி விஜய்க்கு ரசிகர்கள் பதிலளித்தனர். அத்துடன் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரை ரசிகர்கள் கலாய்த்தனர். அதை கவனித்த சஞ்சய் மஞ்ரேக்கர் ரோகித் சர்மா சதமடித்த பின் மீண்டும் அந்த புள்ளிவிவரம் ஒளிபரப்பப்பட்ட போது முரளி விஜய் பற்றி புகழ்ந்து பேசியது பின்வருமாறு.

“சொந்த மண்ணில் அரை சதங்களை சதங்களாக மாற்றுவதில் 8 சதங்களுடன் ரோகித் சர்மா 2வது இடத்தில் உள்ளார். அதே சமயம் முதல் இடத்தில் முரளி விஜய் இருப்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் அவரைப் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அவர் அடித்துள்ள 12 சதங்களில் 9 சதங்கள் சொந்த மண்ணில் அடித்ததாகும். அந்த வகையில் சொந்த மண்ணில் அவர் மிகச் சிறந்த சாதனைகளை வைத்து டாப் இடத்தில் இருக்கிறார்” என்று பாராட்டினார்.

IND vs AUS : இந்தியாவை சம்மந்தமில்லாம பேச நீங்க யாரு? மைக்கேல் வாகனுக்கு ரவி சாஸ்திரி சவுக்கடி பதில் – நடந்தது என்ன

அதை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் பாராட்டாமல் இருந்திருந்தாலும் ஆச்சரியமாக உள்ளது என்று மட்டமாக பேசாமல் இருந்திருந்தால் இந்த நிலைமையை சந்தித்திருக்க மாட்டீர்கள் என அவரை மீண்டும் கலாய்க்கிறார்கள். அத்துடன் எப்போதுமே இதே போல வாயை விடுவதும் பின்னர் அதற்காக வறுபடுவதும் உங்களுக்கு புதிதா என்றும் ரசிகர்கள் அவரை கலாய்க்கிறார்கள்.

Advertisement