
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக செப்டம்பர் 28 முதல் சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையிடம் முதன்மை அணி விளையாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த தொடரில் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் முழுவதுமாக இளம் அணி விளையாடும் என்று அறிவித்துள்ள பிசிசிஐ அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த அணியில் இடம் பிடித்துள்ளதன் காரணமாக சில தரமான வீரர்களுக்கு இத்தொடரை விட பெரிய கௌரவமான உலகக்கோப்பையில் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பது 100% உறுதியாகியுள்ளது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:
1. ருதுராஜ் கைக்வாட்: மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் உள்ளூர் தொடரில் கேப்டன்ஷிப் செய்து ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளதால் இத்தொடரில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்றுள்ளார். இருப்பினும் கடந்த விஜய் ஹசாரே 50 ஓவர் தொடரில் 28 போட்டிகளில் 1941 ரன்களை 42.19 என்ற சராசரியில் குவித்து சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் கடந்த வருடம் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.
அதனால் இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டாலும் குறைந்தபட்சம் உலகக் கோப்பை அணியில் பேக்-அப் தொடக்க வீரராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தொடரில் தேர்வாகியுள்ளதால் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் முதன்மையானவர்களாவும் இஷான் கிசான் பேக்-அப் வீரராகவும் தேர்வு செய்யப்படுவார்கள் அவருக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லலாம்.
2. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 2020 அண்டர்-19 உலக கோப்பையில் தொடக்க வீரராக அதிக ரன்கள் (400) அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் ஐபிஎல் 2023 தொடரில் உச்சகட்டமாக 625 ரன்களை விளாசி அதிவேகமாக அரை சதமடித்து இரட்டை சரித்திர சாதனை படைத்தார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள அவர் முதல் போட்டியில் 171 ரன்கள் குவித்து நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.
அதை விட 32 லிஸ்ட் ஏ 50 ஓவர் போட்டிகளில் 1 இரட்டை சதம் உட்பட 1511 ரன்களை 53.96 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ள அவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேனுக்கு நிலவும் பஞ்சத்தை தீர்ப்பதற்காகவே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஏற்கனவே சொன்னது போல் ரோகித் – கில் ஆகியோர் இருக்கும் நிலையில் அனுபவமற்ற இவருக்கு பதிலாக இஷான் கிசான் பக்கம் இந்திய தேர்வுக்குழு திரும்புவதற்கு தயாராகியுள்ளது.
3. வாஷிங்டன் சுந்தர்: 2011 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னா, சச்சின் போன்ற பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்கள்ளாக வெற்றிகளில் பங்காற்றியதை போல தற்போதைய அணியில் யாருமே இல்லாததே சமீப காலங்களில் ஐசிசி இந்தியா தோல்வியை சந்திக்க காரணம் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2017இல் அறிமுகமானாலும் காயத்துடன் கடுமையாக போராடி ஒரு வழியாக கடந்த வருடம் நிலையான வாய்ப்புகளைப் பெற்ற இவர் நியூசிலாந்து தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
அதனால் ரெய்னா போல 2011 உலக கோப்பையில் செயல்படுவதற்கு வாஷிங்டன் சுந்தர் தகுதியானவர் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியிருந்தார். ஆனாலும் ஐபிஎல் 2023 தொடரை போல அடிக்கடி காயத்தை சந்தித்து முழுமையாக விளையாடாமல் இருக்கும் அவரை உலகக் கோப்பையில் புறக்கணிக்க தேர்வும்குழு முடிவெடுத்துள்ளது.
4. அர்ஷிதீப் சிங்: 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அசத்தி வந்த இவர் 2022 சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்காக அறிமுகமாகி நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி சிறப்பாகவே பந்து வீசினார். அதனால் 2022 டி20 உலக கோப்பையில் தேர்வாகி அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வாசிம் அக்ரம் போல அசத்துவதாக முன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
இதையும் படிங்க:அஸ்வின் என்னையே திணறிடிச்சவர் தான் ஆனா இப்போதைக்கு ஆல் டைம் கிரேட்ன்னு சொல்ல முடியாது – ஏபிடி பேட்டி
இருப்பினும் கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடரில் நோபால்களை போட்டு மோசமான உலக சாதனை படைத்ததால் அவரை தேர்வுக்குழு உலக கோப்பையில் கழற்றி விட தயாராகியுள்ளது. ஆனால் பும்ரா, ஷமி, சிராஜ் என அனைவருமே வலது கை பவுலர்களாக இருப்பதால் இவரைப் போன்ற ஒரு இடது கை பவுலர் இல்லாதது உலகக் கோப்பை இந்தியாவுக்கு தோல்வியை கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.