அஸ்வின் என்னையே திணறிடிச்சவர் தான் ஆனா இப்போதைக்கு ஆல் டைம் கிரேட்ன்னு சொல்ல முடியாது – ஏபிடி பேட்டி

AB De Villiers
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 20ஆம் தேதி துவங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முன்னதாக டாமினிகா நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கி 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அவரை விட மொத்தமாக 12 விக்கெட்டுகள் சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸை வெறும் இரண்டரை நாட்களில் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தம்மை தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டீர்களே என்று இந்திய அணி நிர்வாகத்துக்கு பதிலடி கொடுத்த அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார்.

ஏபிடி பாராட்டு:
தமிழகத்தைச் சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2010இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் 2017 வரை ஆதரவாக இருந்த தோனி கேப்டனாக பதவி விலகிய பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒதுக்கப்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு 486 விக்கெட்களையும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

Ashwin 2

அதிலும் இடது கை பேட்ஸ்மேன்கள் தெறித்து ஓடும் அளவுக்கு அதிக முறை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ள அவர் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சி அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்ற இந்திய வீரர் என்ற சரித்திரமும் படைத்துள்ளார். மேலும் அனில் கும்ப்ளேவுக்கு பின் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை (709) எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு அசத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களை ஆங்கிலத்தில் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுவார்கள். அந்த வகையில் தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் அவ்வாறு அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும் அதற்கு 500 – 600 போன்ற இன்னும் சற்று அதிகமான விக்கெட்டுகளை எடுத்து சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் எப்போதுமே அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை என்றும் பாராட்டியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியில் வெறும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமல்லாமல் மொத்தமாக அவர் நம்ப முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு 12/131 என்ற சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்தார். நானும் அவரை நிறைய போட்டிகளில் எதிர்கொண்டுள்ளேன். அதில் என்னை அவர் திணறடித்து கவரும் வகையில் செயல்பட்டார்”

ABD

இதையும் படிங்க:ஒரு வழியா மிராக்கிள் நடந்துருச்சு, இலங்கையை வீழ்த்தியும் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

“மேலும் காலத்திற்கேற்றார் போல் தன்னுடைய திறமையையும் ஆட்டத்தையும் மெருகேற்றியுள்ள அவர் இடது மற்றும் வலது ஆகிய 2 வகையான பேட்ஸ்மேன்களையும் கச்சிதமாக விளையாட விடுவதில்லை. இது அவரை ஆல் டைம் கிரேட்டஸ்ட் வீரர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு தகுதியான ஒன்றாக காட்டுகிறது. இருப்பினும் அவரை இன்னும் சில விக்கெட்டுகளை எடுக்க விடுங்கள். பின்னர் நிச்சயமாக கோட் என்று அனைவரும் அழைப்போம். மிகச் சிறப்பான பவுலரான அவர் இந்தியாவின் மேட்ச் வின்னர்” என்று கூறினார்.

Advertisement